சிங்கப்பூர் ஆகாயப் படை, சொகுசுக் கப்பலில் நோயுற்ற ஒருவரைப் பொது மருத்துவமனையில் சேர்ப்பதற்காக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) மீட்டுவந்துள்ளது என்று அதன் ஃபேஸ்புக் பதிவில் பிற்பகல் மணி 1.14க்குப் பதிவிட்டுள்ளது.
சிங்கப்பூர்க் கடற்பகுதியில் இருந்த அந்தக் கப்பலில் உடல் நலமில்லாத ஒருவருக்கு உடனடி மருத்துவ உதவி கேட்டு அழைப்பு வந்ததும் ஆகாயப் படையின் ‘ரெஸ்கியூ10’ எனும் தேடுதல் மீட்புப் பிரிவு வெள்ளிக்கிழமை காலையில் அவரை மீட்கும் பணியில் இறங்கியது.
“நோயுற்றவர் பாதுகாப்பாகக் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு, தற்போது சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடலநிலை சீராக உள்ளது,” என்று ஆயுதப் படையின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையத்தின்கீழ் செயல்படும், கடல்துறை மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தின் உதவியோடு அந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எப்போது அழைத்தாலும் உடனே செயல்படும் திறத்தோடு, சிங்கப்பூர் ஆகாயப் படையின் தேடுதல் மீட்புப் பிரிவு, 24 மணிநேரமும் உயிர்காக்கும் பணிகளில் உதவத் தயார் நிலையில் உள்ளது.
சிங்கப்பூர்க் கடற்பகுதியில் உதவி நாடும் கப்பல்களுக்குச் சென்று நோய்வாய்ப்பட்டோரை அல்லது அவசர மருத்துவம் தேவைப்படுவோரை மீட்டு உள்ளூர் மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கு அப்பிரிவின் அதிகாரிகள் அடிக்கடி அழைக்கப்படுகிறார்கள்.
2024ஆம் ஆண்டிலிருந்து தேடுதல் மீட்புப் பிரிவில் ‘எச்225எம்’ ரக ஹெலிகாப்டர்கள் செயல்படுகின்றன. சிங்கப்பூர்த் தற்காப்பு அமைச்சினுடைய தரவுகளின்படி அந்த விமானத்தால் 740 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும்,


