பழைய கட்டடங்களின் நிலையை ஆராய விதிமுறை மாற்றம் உதவும்: டோங்

பழைய கட்டடங்களின் நிலையை ஆராய விதிமுறை மாற்றம் உதவும்: டோங்

2 mins read
கட்டடங்களின் ஒட்டுமொத்த விற்பனைக்கான விதிமுறையில் பரிந்துரைக்கப்பட்ட மாறறங்களுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது
8e32e796-fee3-407c-9f86-13d404bd35a2
சட்ட அமைச்சர் எட்வின் டோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

நிலப் பட்டா (கூட்டுரிமை) சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களுக்கு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் பழைய தனியார் கட்டடங்களை ஒட்டுமொத்தமாக விற்பது எளிதாகும்.

விதிமுறை மாற்றங்கள்

தற்போதைய விதிமுறைகளின்படி ஒரு கட்டடத்தில் குறைந்தபட்சம் 80 விழுக்காட்டு உரிமையாளர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அதை ஒட்டுமொத்தமாக விற்க முடியும். மாற்றங்களின்படி 40லிருந்து 59 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கட்டடங்களுக்கு அவ்விகிதம் 70 விழுக்காடாகவும் 60 ஆண்டுகள் அல்லது அதற்கும் பழைமையான கட்டடங்களுக்கு 65 விழுக்காடாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

பழைய கட்டடங்களைப் புதுப்பிக்க செலவு செய்வது ஆக்ககரமானதா, பலனளிக்கக்கூடியதா அல்லது சம்பந்தப்பட்ட கட்டடங்கள் இருக்கும் நிலத்தை வேறு காரணங்களுக்காகவோ மற்ற கட்டடங்களுக்காகவோ பயன்படுத்துவது சிறந்ததா என்பதை ஆராய்வதற்கு வகைசெய்ய இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.

“காலப்போக்கில் (கட்டடத்தின்) முக்கிய அங்கங்கள் அவற்றின் செயல்பாட்டுக் காலத்தை விஞ்சும்; பழுதுபார்ப்புச் செலவு அதிகரிப்பதோடு செலவு அடிக்கடி ஏற்படும். மேலும், கட்டமைப்பு, அதன் முறைகள், பொது வளாகங்களை உள்ளடக்கிய கட்டடத்தின் அடிப்படை அம்சம் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதற்காக மட்டுமே அதிகம் செலவு செய்யவேண்டியிருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

பல தரப்புகள் சம்பந்தப்பட்டுள்ளன

தாங்கள் இருக்கும் இடங்களின் நிலை குறைபாடுகளுக்கு உள்ளாகும்போது அங்குள்ள குடியிருப்பாளர்கள், வாடகைதாரர்கள் ஆகியோரின் வாழ்க்கைத் தரமும் குறையும் என்று திரு டோங் சுட்டினார். சம்பந்தப்பட்ட இடம் களையிழக்கும் என்றும் அவர் சொன்னார்.

“பெரும்பாலான வேளைகளில் உரிமையாளர்கள் தெரிவுகளின்றி தவிப்பர். அவர்களால் தங்களின் சொத்துகளை சீராக வைத்துக்கொள்ளவும் முடியாது இடத்தை மறுபயனீட்டுக்காகப் பயன்படுத்தவும் முடியாது. இது, குடியிருப்பாளர்களுக்கு நல்லதல்ல. சிங்கப்பூருக்கு இது நல்லதன்று,” என்று அமைச்சர் டோங் விவரித்தார்.

தற்போதைய நிலவரப்படி, தரைவீடு அல்லாத ஒவ்வோர் 20 தனியார் வீடுகளில் ஒன்று 40 ஆண்டுகளையும் தாண்டி பழைமையானது என்று அவர் தெரிவித்தார். கிட்டத்தட்ட 250 சொத்துகளில் ஏறத்தாழ 20,000 வீடுகளுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

1970களிலும் 90களிலும் சிங்கப்பூர் மிக வேகமாக நகரமயமானதால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும் என்றும் திரு டோங் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்எட்வின் டோங்வீடுதனியார்விற்பனைவிதிமுறை