வெளிநாடுகளில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கான விதிமுறைகள்

2 mins read
f0d930fe-a914-446d-a543-78c7f174184f
சிங்கப்பூரில் அனைத்துப் பொதுப் பாதைகளிலும் பல உட்புற இடங்களிலும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கு அனுமதி உண்டு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

துடிப்பான நடமாட்ட ஆலோசனைக் குழு, தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகளை அண்மையில் பரிந்துரைத்தது.

மின்சாரத்தில் இயங்கும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் வேக வரம்பு 10 கிலோமீட்டரிலிருந்து 6 கிலோமீட்டருக்குக் குறைக்கப்படுவது, மருத்துவப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அல்லது நடக்க சிரமப்படுவதாகச் சான்று அளிக்கப்பட்டவர்களுக்கு நடமாட்டச் சாதனங்களைக் கட்டுப்படுத்துவது ஆகியவை கூடுதலான கட்டுப்பாடுகளில் அடங்கும்.

தற்போதைய விதிமுறைகளை மறுஆய்வு செய்த குழு, வெளிநாட்டுச் சட்டங்களின் விதிமுறைகளையும் ஆய்வு செய்தது.

உலகம் முழுதும் வெவ்வேறு இடங்களில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கான விதிமுறைகளைப் பார்ப்போம்.

நடமாட்டச் சாதனங்களுக்கு எங்கெல்லாம் அனுமதி?

சிங்கப்பூரில் அனைத்துப் பொதுப் பாதைகளிலும் பல உட்புற இடங்களிலும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கு அனுமதி உண்டு. ஆனால், சாலைகளில் அவை தடை செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் மாநில, உள்ளூர் அரசாங்கங்களும் வர்த்தகங்களும் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்தும் உடற்குறை உள்ளவர்களை, பொதுமக்கள் அனுமதிக்கப்படும் அனைத்து இடங்களிலும் அனுமதிக்கவேண்டும் என்று அந்நாட்டு நீதித்துறை தெரிவித்தது.

அத்தகைய சாதனங்களின் வேக வரம்பைக் கட்டுப்படுத்துவது அல்லது அந்த இடங்களில் அனுமதி இல்லாத பகுதிகளைக் குறிப்பிடுவது போன்ற விதிமுறைகளை வர்த்தகங்கள் அறிமுகப்படுத்தலாம்.

பிரிட்டன், ஜப்பான், கனடா போன்ற நாடுகளில் பெரும்பாலான பொதுப் போக்குவரத்து வாகனங்களில் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

பிரிட்டனிலும் நெதர்லாந்திலும், சாலைகளில் செல்ல அவற்றுக்கு அனுமதி உண்டு. ஆனால், வேகமான போக்குவரத்துக்குப் பயன்படும் இருவழிச் சாலைகளில் அவற்றுக்கு அனுமதி கிடையாது.

குவீன்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா போன்ற ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் மின் ஸ்கூட்டர்களுக்கும் சக்கர நாற்காலிகளுக்கும் நடைபாதைகளிலும் சாலைகளிலும் செல்ல அனுமதி உண்டு.

சீனாவின் குவாங்ஸோ நகரில் மின்சாரச் சக்கரநாற்காலிகளுக்கான விதிமுறைகள் இல்லை.

குறிப்புச் சொற்கள்