சினாபுங் எரிமலையிலிருந்து குமுறல் சத்தம்; மக்களுக்கு எச்சரிக்கை

சினாபுங் எரிமலையிலிருந்து குமுறல் சத்தம்; மக்களுக்கு எச்சரிக்கை

2 mins read
b754745b-0c28-4132-96a5-f4d929e1449b
2021ல் சினாபுங் எரிமலை குமுறியபோது 4.5 கிலோ மீட்டர் உயரத்திற்கு கரும்புகை எழுந்தது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

மேடான்: இந்தோனீசியாவில் உள்ள சினாபுங் எரிமலை வெடிப்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியிருப்பதால் அங்குள்ள சுற்று வட்டாரப் பகுதிகள் பாதுகாப்புக் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டன.

எரிமலை, நிலவியல் பேரிடர் குறைப்பு மையத்தின் சினாபுங் கண்காணிப்புக் கட்டுப்பாட்டு மையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஆகஸ்ட் 19 முதல் காலவரையறையின்றி இந்த மூடல் நடைமுறைக்கு வந்துள்ளதாக காரோ இளையர் நலன், விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைப்பின் தலைவர் ஜுனி அண்டோமி கெமிட் தெரிவித்தார்.

காரோ வட்டார ஆளுநர் ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று வெளியிட்ட பொது அறிவிப்பையடுத்து இந்த மூடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அறிக்கையில் குடியிருப்பாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மலையேறுபவர்கள் உள்ளிட்டோர் சினாபுங் எரிமலையைச் சுற்றிலும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

“சினாபுங் எரிமலையின் செயல்பாடு அதிகரித்து வருவதால் குடியிருப்பாளர்கள், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாவ் காவர் ஏரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது,” என்று ஆகஸ்ட் 26 அன்று ஜூனி தெரிவித்தார்.

சினாபுங் சிகரத்திலிருந்து 3 கி.மீ. சுற்றளவிலும், தென்கிழக்குப் பகுதிக்கு 4.5 கி.மீ. சுற்றளவிலும் குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க அரசு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சுமார் 400 ஆண்டுகள் அமைதியாக இருந்த 2,460 மீட்டர் உயரமுள்ள சினாபுங் எரிமலை 2010 ஆகஸ்ட் 29 அன்று வெடித்தது. செப்டம்பர் 2010, 2013ல் இதன் செயல்பாடு குறைந்தது.

ஆனால் 2013 நவம்பரில் ஒரு பெரிய எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. அப்போது எச்சரிக்கை நிலை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டது.

இந்த வெடிப்பில் வெளியான வெப்பக் கழிவுப் பாறைகள், வாயுக்களின் சீற்றத்தால் 12க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் 21 கிராமங்கள், இரண்டு சிற்றூர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்