லிட்டில் இந்தியாவில் தப்பியோடிய கார் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

லிட்டில் இந்தியாவில் தப்பியோடிய கார் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

படம்: ஏஷியாஒன்

10 Nov 2026 - 8:44 pm

2 mins read

லிட்டில் இந்தியாவில் காவல்துறையின் உத்தரவையும் மீறி காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர்மீது நவம்பர் 7ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆபத்தான முறையில் காரை ஓட்டியதாகவும் மூவரை காயப்படுத்தியதாகவும் 33 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 6ஆம் தேதியன்று இரவு 8.30 மணியளவில் ரிவர் வேலி ரோடு உணவகம் ஒன்றில் இருந்த யுகேந்திரன் கே. ஏழுமலை, 33, அங்கு 34 வயது நபரின் முதுகில் பேனா கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

அதன்பின் யுகேந்திரன் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மறுநாள் பாலஸ்டியர் ரோடு அருகே டெசன்சன் ரோட்டில் சுற்றுக் காவலில் ஈடுபட்ட அதிகாரிகள், சந்தேகம் ஏற்பட்டு ஒரு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர்.

ஆனால் அதில் இருந்த யுகேந்திரன் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகள் அந்த வாகனத்தைத் துரத்திச் சென்றனர். அப்போது போக்குவரத்து சிவப்பு விளக்கையும் மீறி அவர் காரை ஓட்டிச் சென்றதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ரேஸ் கோர்ஸ் ரோடு, பிர்ச் ரோடு சந்திப்பில் அந்த வாகனம் மற்றொரு காரின் மீது மோதி கவிழ்ந்தது.

மற்றொரு காரை ஓட்டிச் சென்ற 36 வயது ஆண் ஓட்டுநரும் அதில் பயணம் செய்த 26, 42 வயதுடைய இரண்டு பெண் பயணிகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

யுகேந்திரன் கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

யுகேந்திரனின் வழக்கு நவம்பர் 13ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

ஆயுதத்தால் ஒருவரைத் தாக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது மூன்றும் விதிக்கப்படலாம்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மற்றவர்களுக்குக் காயம் விளைவித்த குற்றம் முதல்முறையாக நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்