தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஸ் ஈஸ்வரனுக்கு ஓராண்டுச் சிறை ஏன்: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

2 mins read
fe51acfd-f38f-4b26-a1c1-b83422ada4d5
தண்டனை விதிப்புக்குப் பிறகு உயர் நீதிமன்றத்திலிருந்து வெளியான திரு எஸ். ஈஸ்வரன். - படம்: சுந்தர நடராஜ்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டுச் சிறைத்தண்டனை எதிர்பார்க்கப்படாத ஒன்று.

அரசுத் தரப்பு, தற்காப்புத் தரப்பு என இருதரப்பினரும் கேட்டுக்கொண்டதைக் காட்டிலும் அதிகமான தண்டனை எஸ் ஈஸ்வரனுக்கு விதிக்கப்படுவதாக நீதிபதி வின்சன்ட் ஹூங் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

“ஒரு பொது ஊழியராக, குற்றவாளி, உயர் பதவியை வகித்ததாகக் கூறும் அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்கிறேன். அவரது பதவிக்கேற்ப குற்றங்களின் தன்மையும் அதிகரிக்கும்,” என்று நீதிபதி குறிப்பிட்டார்.

உயர் பதவிகளை வகிப்போர் அரசாங்க ஊழியர்களுக்கு முன்மாதிரியாக நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.

குற்றங்களில் ஈடுபட்டபோது ஈஸ்வரன் வகித்த பதவி, குற்றங்கள் நிகழ்ந்த காலம், பொதுநலன், பொது அமைப்புகள் மீதான நம்பிக்கைக்கு ஏற்பட்ட இழுக்கு ஆகியவற்றை, தண்டனையை முடிவு செய்தபோது கருத்தில் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

“ஓர் அமைச்சராகவும் ஃபார்முலா ஒன் (F1) வழிகாட்டுக் குழுவின் தலைவராகவும் இருந்த ஈஸ்வரன் அரசாங்க அமைப்புகளுக்கும் சிங்கப்பூர் கிராண்ட் ப்ரீக்கும் இடையிலான உயர்மட்ட முடிவுகளை மேற்பார்வையிடும் பொறுப்பில் அமர்த்தப்பட்டு இருந்தார்.

“கொடுப்பவரின் நோக்கம் என்ன என்பது ஈஸ்வரனுக்குத் தெரிந்து இருக்கும். நல்லெண்ணத்தை அல்லது விசுவாசத்தை ஏற்படுத்தக்கூடியதாக அந்த நோக்கத்தை எடுத்துக்கொள்ளலாம்.

“தனது அலுவலகச் செயல்பாடுகளுக்கும் கொடுப்பவரின் விருப்பத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை குற்றவாளி அறிந்திருக்கும் சூழலில், மதிப்புமிக்க பொருளைப் பெறலாம் என்ற முடிவு குற்ற எண்ணத்தின் அறிகுறி,” என்று விளக்கிய நீதிபதி, பரிசுகளைப் பெறுவதில் ஈஸ்வரன் தெரிந்தே செயல்பட்ட விதங்களைப் பட்டியலிட்டார்.

2017ஆம் ஆண்டு ஃபார்முலா 1 கார் பந்தயத்தின்போது, $4,200க்கு மேல் விலையுள்ள, கார் பந்தயத்தை சொகுசு மிகுந்த வசதிகளுடன் (Green Room) காண்பதற்கான 10 நுழைவுச்சீட்டுகளை ஈஸ்வரன் கேட்டுப் பெற்றார் என்பதும் அந்தப் பட்டியலில் அடங்கும்.

நீதிபதி அதுபற்றி குறிப்பிடுகையில், “அந்த நுழைவுச்சீட்டுகளை ஈஸ்வரன் விற்கவில்லை என்றும் மாறாக குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்குமே வழங்கினார் என்றும் தற்காப்புத் தரப்பு கூறுகிறது.

“ஆனால், அந்த நுழைவுச்சீட்டுகள் ஈஸ்வரனுக்கு வழங்கப்படாமல் இருந்திருந்தால், கார் பந்தயத்தை ஏற்று நடத்திய அமைப்பு அவற்றை மற்றவர்களுக்கு இலவசமாகக் கொடுத்திருக்க முடியும் என்ற உண்மையைத் தற்காப்புத் தரப்பு கவனிக்கவில்லை.

“அந்த நுழைவுச்சீட்டுகளைப் பெற்றதன் மூலம், குற்றம் சாட்டப்பட்டவர் வகித்த பதவியின் நேர்மைத்தன்மைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது,” என்றார்.

திரு ஓங் கேட்டுக்கொண்டதன்பேரில் அந்த நுழைவுச்சீட்டுகள் ஈஸ்வரனுக்கு இலவசமாக வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் கிராண்ட் ப்ரீயின் (SGP) 90 விழுக்காட்டும் மேலான பங்குகளை வைத்திருக்கும் திரு ஓங், அரசாங்கத்துடன் நீண்டகால உறவில் இருந்தார் என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

கவனத்தில் கொள்ளப்பட்ட 30 குற்றச்சாட்டுகள் ஈஸ்வரன் திரும்பத் திரும்ப செய்த குற்றங்களை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

கடைசிக்கட்ட விசாரணையின்போதே தமது குற்றங்களுக்காக மனம் வருந்துவதாக ஈஸ்வரன் தெரிவித்ததாகவும் நீதிபதி கூறினார்.

முன்னதாக, குற்றங்கள் பொய்யானவை என்றும் தாம் குற்றமற்றவர் என்றும் ஈஸ்வரன் வெளியில் கூறியதையும் நீதிபதி நினைவுகூர்ந்தார்.

குறிப்புச் சொற்கள்