சிங்கப்பூரின் எரிசக்தி நிலைமாற்றம் விரிவடைவதால், தூய எரிசக்தித் துறையில் வேலை செய்வோரின் எண்ணிக்கை 2032க்குள் 80 விழுக்காடு அதிகரித்து 2,700 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னுற்பத்தித் துறையும் இதே காலகட்டத்தில் 800 ஊழியர்களை வேலைக்குச் சேர்த்து விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார விநியோகம், கரிமம் குறைவான மாற்று மின்னுற்பத்தி முறைகள், சூரியவொளி சக்தி, அறிவார்ந்த மின்னோட்டக் கட்டமைப்புகள் போன்றவற்றில் இவர்களுக்கு வேலை கிடைக்கும்.
எரிசக்திச் சந்தை ஆணையம் 2022ல் நடத்திய எரிசக்தித் துறை மனிதவள ஆய்வின் இந்த முடிவுகள், வெள்ளிக்கிழமை நடைபெற்ற எரிசக்திப் புத்தாக்கம் 2023 நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
தூய எரிசக்தித் துறையில் வேலை செய்வோரில் 83 விழுக்காட்டினர் சிங்கப்பூர்வாசிகள் என்றும் ஆய்வு கண்டறிந்தது. சென்ற ஆண்டு இந்தத் துறையில் 1,500 பேர் வேலை செய்தனர்.
“ஊழியரணியில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியால் சிங்கப்பூர்வாசிகளுக்கு வேலை கிடைக்க நல்ல வாய்ப்புண்டு,” என்று ஆணையத்தின் அறிக்கை குறிப்பிட்டது.
நிகழ்ச்சியில் பேசிய வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங், எதிர்காலத்தில் ஹைட்ரஜன், அமோனியா மின்னுற்பத்தித் தொழில்நுட்பங்களை சிங்கப்பூர் பயன்படுத்தத் தொடங்கும்போது, அந்த ஆலைகளை இயக்கவும் பராமரிக்கவும் ஊழியர்கள் தேவைப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
எரிசக்திப் புத்தாக்கத்திற்கும் சிங்கப்பூர் முக்கியத்துவம் அளித்து வருகிறது. சிங்கப்பூரின் இன்றைய கரியமிலவாயு வெளியாக்கத்தில் ஐந்தில் இரு பகுதிக்கு மின்னுற்பத்தித் துறை பங்களிக்கிறது.
சூரிய மின்தகடுகளின் பயன்பாட்டை சிங்கப்பூர் துரிதப்படுத்தினாலும், மேகமூட்டம், நகர்ப்புற நிழல் போன்றவற்றால் நேரக்கூடிய தடங்கல் சமாளிக்கப்படவேண்டும் என்றார் திருவாட்டி லோ.
தொடர்புடைய செய்திகள்
எரிசக்திச் சேமிப்பகங்கள் இதற்கு முக்கியம். தேவை குறைவாக இருக்கையில் மிகையான சூரிய சக்தியை இவை சேமித்து வைத்து, தேவை அதிகரிக்கும்போது கூடுதல் சக்தியளிக்கலாம்.
இதற்காக, எரிசக்திச் சேமிப்பகத் தீர்வுகளுக்கான இரண்டாவது மானிய அழைப்பை எரிசக்திச் சந்தை ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. பாதுகாப்பான, சிக்கனமான, அதிக இடமெடுக்காத தீர்வுகளைத் தொழில்துறையும் ஆய்வாளர்களும் கூட்டாகத் தயாரிக்க இந்த மானியம் ஊக்கமளிக்கும்.
செம்ப்கார்ப் நிறுவனம் வெறும் ஆறே மாதங்களில் ஜூரோங் தீவில் 285 மெகாவாட் எரிசக்திச் சேமிப்பகத்தை 2022ல் செயல்படுத்தியது. தென்கிழக்காசியாவின் ஆகப்பெரிய சேமிப்பகமான இது, உலகிலேயே இதே அளவிலான சேமிப்பகங்களில் ஆக வேகமானதும்கூட எனத் திருவாட்டி லோ குறிப்பிட்டார்.
தூய எரிசக்தித் துறையில் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் கூடுதல் ஆதரவளிக்க, ஷெல், என்விஷன் டிஜிட்டல் போன்ற நிறுவனங்களுடன் ஆணையம் பங்காளித்துவ ஒப்பந்தங்களையும் செய்துள்ளது.
இந்தப் பங்காளித்துவங்களின் ஒரு பகுதியாக, மூன்று உள்ளூர் நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன.
முதல் நிறுவனமான பவர்ஃபசாட், கட்டடங்களின் வெளிப்புறத்துடன் ஒருங்கிணைக்கக்கூடிய வண்ணச் சூரிய மின்தகடுகளை உருவாக்கி வருகிறது. கூடுதல் நிலம் தேவைப்படாமல் சூரியவொளிப் பயன்பாட்டு இலக்கை அடைவதற்கு இவை பயன்படும் என்றார் திருவாட்டி லோ.
இரண்டாவது நிறுவனமான எடாவோல்ட், சூரிய மின்தகடுகளின் ஆயுட்காலம் முழுவதும் உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிகப்படுத்தும் வழிமுறைகளை ஆராய்கிறது. அதோடு, தகடுகளின் ஆயுட்காலம் முடிவடைந்ததும் அவற்றிலுள்ள மதிப்புமிக்க மூலப்பொருள்களை மறுசுழற்சி செய்ய அறிவார்ந்த மறுசுழற்சி ஆலையை உருவாக்கி வருகிறது.
மூன்றாவது நிறுவனமான அம்போடெக், சூடேற்ற, காற்றோட்ட, குளிர்சாதனத் தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது. கட்டட உரிமையாளர்கள் எரிசக்தியைச் சேமிக்கவும் எரிசக்தியின் செயலாற்றலை மேம்படுத்தவும் இது துணைபுரியும்.