சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று பல சோதனைகளைக் கடந்து அனைத்துலக உந்துகணைத் தயாரிக்கும் 'பிரெண்ட்ஸ் ஆஃப் அமெட்சுவர் ராகெட்ரி' போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
எட்டு பேர் கொண்ட அந்தக் குழுவில் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
கலிஃபோர்னியாவின் மொஜாவே பாலைவனத்தில் போட்டி நடந்தது.
உந்துகணைத் தயாரிக்கத் தேவையான பாகங்களில் மூன்றில் ஒரு பங்கை தங்கள் பயணப்பெட்டிகளில் மாணவர்கள் எடுத்துச் சென்றனர். மற்ற பாகங்களை சரக்கு விமானத்தில் அனுப்பினர்.
மாணவர்களுக்குத் தேவையான இயந்திரம் உள்ளிட்ட உந்துகணையின் முக்கிய பாகங்களை அமெரிக்க சுங்க அதிகாரிகள் நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் மாணவர்கள் போட்டியில் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இருப்பினும் மனம் தளராத சிங்கப்பூர் மாணவர்கள் போட்டி ஏற்பாட்டாளர்கள், போட்டியில் கலந்துகொள்ள வந்த மற்ற குழுக்கள் ஆகியோரிடம் இருந்து உந்துகணைப் பாகங்களை இரவல் பெற்றனர்.
பாலைவனத்தில் நடந்த இந்தப் போட்டியில் கடுமையான வானிலையையும் சூழலையும் பொருட்படுத்தாமல் ஜூன் 2, 3 ஆம் தேதிகளில் கடுமையாக நேரம் உழைத்து ஜூன் 4ஆம் தேதி 3 மீட்டர் உந்துகணையை உருவாக்கி வெற்றிபெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவர்கள் லாப நோக்கமற்ற தொண்டூழிய குழுவான 'செட்ஸ்' எனும் மாணவர்களுக்கான விண்வெளி ஆய்வு மற்றும் மேம்பாட்டு குழுவைச் சேர்ந்தவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
'புரோஜெக்ட் மைனா' என்றழைக்கப்படும் மாணவர்களின் உந்துகணை கிட்டத்தட்ட 3.2 கிலோமீட்டர் உயரம் பறந்தது.
" இரண்டு ஆண்டு உழைப்பு, பண செலவு போன்ற காரணங்களால் போட்டியில் இருந்து விலக எங்கள் அணிக்கு விருப்பம் இல்லை, இவ்வளவு சிரமங்களையும் தாண்டி வெற்றிபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது" என்று குழுவின் தலைவர் துருவ் மிட்டல் (25) தெரிவித்தார்.