சிங்கப்பூரில் கூடுதல் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிலிப்பீன்ஸ் பணிப்பெண் மாண்டது குறித்து சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒன்டால் சார்லின் வர்காஸ் என்ற அந்த 43 வயது பணிப்பெண் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் நான்காவது நாள் மாண்டார்.
பெண்ணின் மரணம் துரதிர்ஷ்டமானது, அவருக்கு இதய தசையில் வீக்கம் ஏற்பட்டு மாண்டதாக அறிக்கை குறிப்பிட்டது.
பணிப்பெண் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி ஃபைசர்-பயான்டெக் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். டிசம்பர் 10 அன்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிசம்பர் 13ஆம் தேதி அவர் மாண்டார்.
மாண்ட பணிப்பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு முறை மட்டும் வழங்கப்படும் நிதியுதவியாக 225,000 வெள்ளி வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
பெண்ணின் குடும்பத்தினர் நிதி உதவித் திட்டத்துக்கு கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பம் செய்தனர். சுயேச்சை மருத்துவக் குழு அந்த விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்தது.
சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான இரண்டாவது மரணம் இது. 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 வயது பங்களாதேஷ் ஊழியர் தமது முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு மூன்றாவது வாரத்தில் மாண்டார்.
கொவிட் தடுப்பூசி போட்டவர்களுக்கு வரும் பக்கவிளைவுகளில் இதய தசை வீக்கமும் ஒன்று. ஆனால் அது பெரும் ஆபத்தை விளைவிக்காது என்று சுகாதார அமைச்சு கூறியது.

