சிங்கப்பூர் ஆயுதப்படை தினம் ஜூலை 1ஆம் தேதி குறிக்கப்படுகிறது. நாட்டைக் காக்கும் முழுநேர மற்றும் போர்க்காலப் படைவீரர்கள் பங்களிப்பைக் கௌரவிக்கும் இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழ் முரசுஒரு சிறப்பு நேர்காணலை ஜூன் 27ஆம் தேதி நடத்தியது.
நாட்டின் எதிர்காலம் குறித்துப் பேச தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங்கும் முழுநேர தேசிய சேவையாளரான மூன்றாம் சார்ஜண்ட் ரூபன் ஜே ஸ்டீவனும் கலந்துகொண்டனர். 2022ல் உருவாக்கப்பட்ட மின்னிலக்க, உளவுச் சேவைப் பிரிவில் ரூபன் பணியாற்றி வருகிறார்.
“நாடு பாதுகாப்பாக இருக்கும்போது, இளையர்கள் ஏன் ஈராண்டுகளை தேசிய சேவையில் வீணடிக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு அமைச்சர் சான் மிகத் தெளிவாகப் பதிலளித்தார்.
“எதுவுமே நடக்காது என்று நாம் அலட்சியமாக இருந்துவிட்டு, ஆபத்து வரும்போது பதற்றமடைந்து தயாரிப்புகளில் இறங்கினால் அது பயனற்றதாகிவிடும். எனவே, ஆபத்துகள் வராமல் இருக்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்,” என்றார் அவர்.
நாட்டின் அமைதிக்குப் பின்னால், ஆயுதப்படையின் அசாத்திய உழைப்பும் தொடர் கண்காணிப்பும் உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். 1991ல் எஸ்கியூ 117 விமானம் கடத்தப்பட்டது போன்ற சம்பவங்களின்போது ராணுவம் எப்படி முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட்டது என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இன்றைய காலகட்டத்தில் ராணுவம் என்பது வெறும் எல்லைப் பாதுகாப்பு மட்டுமன்று. அது மின்னிலக்க உலகிலும் பரவியுள்ளது. பொய்த் தகவல்களைப் பரப்புதல், இணையத் தாக்குதல்கள் போன்ற புதிய அச்சுறுத்தல்களை சிங்கப்பூர் எதிர்கொண்டு வருகிறது.
இதைப் பற்றிப் பேசிய பகுதிநேர அதிகாரியான மூன்றாம் சார்ஜண்ட் ரூபன் ஜே ஸ்டீவன், தமது துறை மின்னிலக்கப் போர்க்களத்தில் எவ்வாறு முக்கியப் பங்காற்றி வருகிறது என்பதை விவரித்தார். ராணுவ உளவுத்துறை, மின்னிலக்கப் பாதுகாப்பு மற்றும் வீரர்களின் உளவியல் பாதுகாப்பு ஆகியவற்றை மின்னிலக்க, உளவுச் சேவைப் பிரிவு கவனித்துக்கொள்கிறது.
நவீனகால அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்காக, சிங்கப்பூர் ஆயுதப்படை பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அவற்றில் ஒன்றாக, மின்னிலக்க மற்றும் நுண்ணறிவுச் சேவையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்படுத்தப்படுகிறது.
மின்னிலக்கத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, அச்சுறுத்தல்களைக் கண்டறியும் ஏஐ, பொருத்தமான ஆயுதத் திட்டங்களைப் பரிந்துரைக்கிறது. இருப்பினும், ஏஐ ஓர் உதவிக் கருவி மட்டுமே. இறுதி முடிவை எடுப்பது எப்போதும் ராணுவ அதிகாரிகளே.
“தேசியச் சேவையாளர்களின் மறுபயிற்சிக் காலத்தை (In-Camp Training), அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலைகளுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு சமநிலைப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது,” என்று திரு சான் கூறினார்.
மேலும், தற்காலத்தில் வீரர்களின் மருத்துவத் தகுதிக்கேற்ப, அவர்கள் களப்பணிகளில் ஈடுபட முடியாவிட்டாலும், அவர்களின் தனிப்பட்ட திறமைகளுக்கு மதிப்பளித்து, அதற்கு ஏற்றவாறு ராணுவப் பொறுப்புகள் திறம்பட வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
சிங்கப்பூர் எப்போதும் தன் ராணுவப் பலத்தை மட்டுமே நம்பியிருக்காமல், அண்டை நாடுகளுடனான சுமுக உறவிற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.
“நாம் பலமிக்க நாடாக இருக்கும்போதுதான் மற்ற நாடுகள் நமக்கு மதிப்பளிக்கும். மேலும், பிற நாடுகளுடன் இணைந்து நடத்தப்படும் கூட்டு ராணுவப் பயிற்சிகள் மூலம் தற்காப்புத் திறனை மேம்படுத்துவதோடு, அனைத்துலகத் தொடர்புகளையும் வலுப்படுத்தி வருகிறோம்,” என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூர் ஆயுதப்படை தினம் என்பது வெறும் கொண்டாட்டமன்று. நாம் நிம்மதியாக உறங்குவதற்காக விழித்திருக்கும் வீரர்களுக்கு நன்றி செலுத்தும் நாள் இது. நவீனத் தொழில்நுட்பம், முறையான பயிற்சி, அசைக்க முடியாத அரசதந்திரம் ஆகிய முக்கோண உத்திகளோடு சிங்கப்பூரின் எதிர்காலப் பாதுகாப்பு என்றும் உறுதியாக இருக்கும்.

