பன்னாட்டு ராணுவப் பயிற்சியான ‘எக்சர்சைஸ் டேலிஸ்மன் சேபர்’ (எக்ஸ்டிஎஸ்) பயிற்சியில் சிங்கப்பூர் ஆயுதப் படை (எஸ்ஏஎஃப்) முதன்முறையாகப் பங்கேற்றது.
ஆஸ்திரேலியத் தற்காப்புப் படையும் அமெரிக்காவின் இந்தோ பசிபிக் வட்டாரப் படையும் இணைந்து எக்ஸ்டிஎஸ் பயிற்சியை நடத்துகின்றன.
நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கப்பூர் ஆயுதப் படையினர் எக்ஸ்டிஎஸ் பயிற்சியில் பங்கேற்கின்றன. சிங்கப்பூர் ஆயுதப் படையின் ஏவுகணைகளைப் பாய்ச்சும் இரண்டு ‘ஹிமார்’ கருவிகள், இரு சினூக் ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவையும் இப்பயிற்சியில் இடம்பெறுகின்றன.
இம்மாதம் 13ஆம் தேதியிலிருந்து திங்கட்கிழமை (ஜூலை 28) வரை எக்ஸ்டிஎஸ் பயிற்சியில் 18க்கும் மேற்பட்ட பங்காளி நாடுகளைச் சேர்ந்த 40,000 படையினர் பங்கேற்றதாக சிங்கப்பூர் ஆயுதப் படை திங்கட்கிழமை தெரிவித்தது.
11வது முறையாக நடைபெற்ற எக்ஸ்டிஎஸ், ஆசிய பசிபிக் வட்டாரத்தில் நடைபெறும் ஆகப் பெரிய பன்னாட்டு ராணுவப் பயிற்சியாகும். ஒவ்வோர் ஈராண்டுகளுக்கு ஒருமுறை இப்பயிற்சி நடைபெற்று வருகிறது. இவ்வாண்டின் பயிற்சி வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி நிறைவடையும்.
தாய்லாந்து, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இப்பயிற்சியில் பங்கேற்கின்றன. மலேசிய, வியட்னாமியப் படைகள் பயிற்சியைக் கவனிக்கும் படைகளாகக் கலந்துகொண்டன என்று ஆஸ்திரேசியத் தற்காப்புப் பிரிவு தெரிவித்தது.
சிங்கப்பூர் ஆயுதப் படையின் சிறப்புச் செயல்பாட்டு பணிக்குழு, விமானவியல் சிறப்புச் செயல்பாட்டுப் பணிக்குழு (Special Operations Task Force, Special Operations Aviation Task Group) உள்ளிட்டவை பங்காளிப் படைகளுடன் நடந்த ஒருங்கிணைந்த பயிற்சியில் கலந்துகொண்டன.
இதுகுறித்துப் பேசிய பிரிகேடியர் ஜெனரல் ஆனந்த் சத்தி குமார், “சிங்கப்பூர் ஆயுதப் படை, ராணுவப் பிரிவுகள் ஒன்றுடன் மற்றொன்று இணைந்து செயல்படவும் பங்காளி ராணுவங்களுக்கும் அதற்கும் உள்ள ஆழ்ந்த புரிதலை வலுப்படுத்தவும் வழிவகுக்கும் இதுபோன்ற பலதரப்புப் பயிற்சிகளை நாங்கள் முக்கியமானவையாகக் கருதுகிறோம்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“இத்தகைய வாய்ப்புகள், உத்திகளைப் பொறுத்தவரை சிங்கப்பூர் அயுதப் படைக்கு இருக்கும் ஆற்றலை மேலும் மேம்படுத்தும், நமது ராணுவ வீரர்களின் நிபுணத்துவத் தன்மையை வெளிப்படுத்தும், பங்காளி நாடுகளுடன் நீண்டகால நட்பை வளர்க்கும்,” என்றும் அவர் விளக்கினார்.

