சிங்கப்பூர் ஆயுதப்படை சிறிய, தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளுடன் செயல்படும்: அமைச்சர் சான்

3 mins read
49261041-1d69-42f2-924b-3438cdc78247
சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­ தினத்தை முன்­னிட்டு புதன்கிழமை (ஜூன் 25) தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் செய்­தி­யா­ளர்­களிடம் பேசி­னார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூர் ஆயுதப்படை இனி பெரிய படைப் பிரிவுகளாக அல்லாமல், சிறிய, பிரிவுகளாக மாற்றியமைக்கப்படும் எனத் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பம் சார்ந்த இப்பிரிவுகள் பரவலான முறையில் அதிகமான அளவில் செயல்படும் என்று அவர் கூறினார்.

சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­ தினத்தை முன்­னிட்டு புதன்கிழமை (ஜூன் 25) திரு சான், தற்காப்பு அமைச்சின் தலைமையகத்தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் பேசி­னார்.
செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் பேசி­னார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இம்மாற்றங்கள் சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டையின் நீண்டகாலப் பலங்களை மேலும் வலுவாக்கும் என அவர் கூறினார்.

“1965 முதல், சிங்கப்பூர் ஆயுதப்படை மனிதவளத்தை மட்டுமே சார்ந்து செயல்பட்டதில்லை. தொழில்நுட்பத்தை முக்கியக் கருவியாகக் கொண்டு செயல்பட்டு வந்துள்ளோம்.

“இன்று, சிறிய பிரிவுகளாலும் சுயமாகவும் திறம்படவும் செயலாற்ற முடியும் அளவுக்கு நாம் முன்னேறியுள்ளோம். இதற்குத் தேவையான தலைமைத்துவத் திறன்களை உருவாக்க முழுநேர தேசிய சேவையாளர்களுக்கும் போர்க்காலப் படைவீரர்களுக்கும் வழங்கப்படும் பயிற்சிகள் துணை புரிகின்றன,” என்றார் திரு சான்.

தற்காப்பு அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டதையடுத்து தற்காப்பு அமைச்சில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ​​திரு சான், தொடர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

“சிங்கப்பூர் ஆயுதப்படை, முந்தைய தலைமுறையினர் அமைத்த அடித்தளத்தின்மீது கட்டமைக்கப்படுகிறது. நான் ராணுவத் தளபதியாக இருந்தபோது தொடங்கப்பட்ட சில முயற்சிகளின் பலன்களை நாம் இன்றுதான் அனுபவிக்கிறோம். ஏனெனில், தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு மட்டுமன்று, திறன்களை உருவாக்குவதற்கும் அவற்றை இயக்க மக்களைப் பயிற்றுவிப்பதற்கும் நேரம் அவசியம்,” என்றார் அவர்.

நமது ராணுவம் எப்போதும் எதிர்காலத்தை நோக்கிச் செயல்படுகிறது என்றும் நாளைய பிரச்சினைகளுக்குத் தொடர்ந்து பதில்களைத் தேடுவதே அதன் இலக்கு என்றும் அமைச்சர் கூறினார்.

பயிற்சியில் ஈடுடும் சிங்கப்பூர் ஆயுதப்படை.
பயிற்சியில் ஈடுடும் சிங்கப்பூர் ஆயுதப்படை. - படம்: த.கவி

மத்திய கிழக்கு நிலவரத்தைச் சுட்டிக்காட்டிய அவர், அந்தப் பகுதியில் நிலவும் பதற்றம் அக்கம்பக்க நாடுகளுக்கு மறைமுகத் தாக்குதல்கள் அல்லது பயங்கரவாதம் முதலியவை மூலம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்தார்.

“ஈரானின் பதிலடி நடவடிக்கைகள் அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் நில்லாது. வேறு இடங்களிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம். உணர்வுகள் தூண்டப்படும்போது, அது மறைமுக அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்,” என்றார் திரு சான்.

இத்தகைய நிகழ்வுகள் சிங்கப்பூரின் பொருளியலையும் பாதிக்கின்றன எனவும் வேலைவாய்ப்பு, ஊதியம், விலைவாசி ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனவும் அவர் கூறினார்.

இன்றைய அச்சுறுத்தல்கள், பயங்கரவாதத்திற்கு அப்பால் இணையத் தாக்குதல்கள், பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சிகள், உள்கட்டமைப்புக்குச் சேதம் போன்றவற்றை உள்ளடக்கியதாக அவர் மேலும் கூறினார்.

பிற அரசு நிறுவனங்களுடன் சேர்ந்து, தினமும் ஆயிரக்கணக்கான இணைய ஊடுருவல் முயற்சிகளை சிங்கப்பூர் ஆயுதப்படை தடுத்து வங்கி, எரிசக்தி, நீர் போன்ற முக்கிய அமைப்புகளைப் பாதுகாத்து வருகிறது.

மேலும், தேசிய சேவையாளர்கள் துப்பாக்கிகளைக் கையாளும் திறனை ஓய்வு நேரங்களில் பராமரிக்க உதவ, புதிய ‘மல்டி-மிஷன் ரேஞ்ச்’ வளாகத்திற்கான திட்டங்களை சிங்கப்பூர் ஆயுதப்படை ஆராய்ந்து வருவதாக திரு சான் தெரிவித்தார்.

துப்பாக்கி பயிற்சியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள்.
துப்பாக்கி பயிற்சியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள். - படம்: தற்காப்பு அமைச்சு

சிங்கப்பூர் ஆயுதப்படையில் பெண்களின் பங்கு குறித்து தமிழ் முரசு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ஆயுதப் படையின் நான்கு சேவைகளிலும் அதில் தொண்டூழியப் படையும் உட்பட பெண்களின் பங்கேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறினார்.

“தற்போதைய ராணுவப் பணிகளில் பல உடல் ரீதியாக கடுமையானவையன்று. இதனால், பெண்கள் பயனுள்ள விதத்தில் பங்களிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கின்றன,” என்றார் அவர்.

தொண்டூழியத் தொண்டு சேவையின் பணிகளை எவ்வாறு மேலும் பன்முகப்படுத்தலாம் என்பதை ஆயுதப்படை மதிப்பீடு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூரின் தற்காப்புச் சூழல் தற்போது பரிணாமம் கண்டுள்ளது எனக் குறிப்பிட்ட அமைச்சர் சான், இனி அது 18 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்களை மட்டும் சார்ந்ததில்லை என்றார்.

குறிப்புச் சொற்கள்