ருவாண்டாவில் முதல் கரிம ஊக்கப் புள்ளித் திட்டத்திற்குச் சிங்கப்பூர் ஒப்புதல்

ருவாண்டாவில் முதல் கரிம ஊக்கப் புள்ளித் திட்டத்திற்குச் சிங்கப்பூர் ஒப்புதல்

படம்: தேசியச் சுற்றுப்புற அமைப்பு

14 Nov 2026 - 7:39 pm

2 mins read

ருவாண்டாவில் பாதுகாப்பான குடிநீர் வசதியை மேம்படுத்துவதற்கான கரிம ஊக்கப் புள்ளித் திட்டத்திற்குச் சிங்கப்பூர் ஒப்புதல் அளித்துள்ளது.

சிங்கப்பூரின் கரிம ஊக்கப் புள்ளிக் கட்டமைப்பின்கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள முதல் திட்டம் இது.

பெரு, ருவாண்டா, தாய்லாந்து, மங்கோலியா, கானா, பூட்டான் ஆகிய நாடுகளுடன் சிங்கப்பூர் கொண்டுள்ள ஆறு நடைமுறைப்படுத்தல் ஒப்பந்தங்களுக்கான திட்ட விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு சனிக்கிழமை (நவம்பர் 14) தெரிவித்தது.

“கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் நிலையான வளர்ச்சிக்கும் கரிம நிதியுதவியைத் திரட்டும் திட்டங்களுக்கு இந்த ஒப்புதல் ஆதரவளிக்கும்,” என்று அந்த அமைப்பு கூறியது. சிங்கப்பூரின் இந்த முதல் அங்கீகாரம், அதன் அனைத்துலகக் கரிமச் சந்தை ஒத்துழைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என்றும் அது குறிப்பிட்டது.

‘கிளைமேட் பிரிட்ஜ் இன்டர்நேஷனல்’ (Climate Bridge International) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அந்தத் திட்டம், பாதுகாப்பான குடிநீர் வசதியை மேம்படுத்துவதன் மூலம் ருவாண்டாவின் தேசிய அளவிலான பங்களிப்புகளின்கீழ் உள்ள அந்நாட்டின் பருவநிலை முன்னுரிமைகளுக்கு ஆதரவளிக்கிறது.

தேசிய அளவிலான பங்களிப்பு என்பது, பாரிஸ் உடன்படிக்கையின்கீழ் ஒவ்வொரு நாடும் மேற்கொள்ளும் தேசியப் பருவநிலைச் செயல் திட்டத்தைக் குறிக்கிறது.

பாதுகாப்பான நீர் விநியோகத் திட்டத்தின் மூலம், ருவாண்டாவின் மேற்கு மாநிலத்திற்கு முக்கியத்துவம் அளித்து, நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கும் பாலர் பருவ மேம்பாட்டு நிலையங்களுக்கும் 300,000 நீர் வடிகட்டிகள் விநியோகிக்கப்படும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

விறகு அல்லது கரியைப் பயன்படுத்தித் தண்ணீரைக் கொதிக்க வைக்கவேண்டிய அவசியமின்றி, பாதுகாப்பான குடிநீர் அவர்களுக்குக் கிடைப்பதற்கு இது வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

“நீரைச் சுத்திகரிக்க இத்தகைய எரிபொருள்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம், கரிம வெளியேற்றத்தையும் வீட்டில் ஏற்படும் காற்று மாசுபாட்டையும் இத்திட்டம் குறைக்கும்,” என்று அந்த அமைப்பு கூறியது.

இந்தத் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 1.8 மில்லியன் பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்