தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எண்ணெய்க்கசிவு சம்பவம்: வெளிநாட்டுக் கப்பலில் பாதுகாப்புக் குறைபாடு

1 mins read
11a8f4e4-1fa1-4133-9322-02b3998ad0a4
பாசிர் பாஞ்சாங் முனையத்தை ஓட்டிய கடற்பகுதியில் ஜூன் 18ஆம் தேதி நிறுத்தப்பட்டிருந்த ‘வோக்ஸ் மாக்ஸிமா’ கப்பல். - படம்: ஏஎஃப்பி

கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த எண்ணெய்க்கசிவுச் சம்பவத்தில் தொடர்புடைய ‘வோக்ஸ் மாக்ஸிமா’ என்ற நெதர்லாந்துக் கப்பலில் தீப்பாதுகாப்பு, உயிர்காப்புக் கருவிகள் தொடர்பில் கடுமையான பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் கண்டுபிடித்துள்ளது.

ஜூன் 15ஆம் தேதி அக்கப்பலில் சோதனை மேற்கொண்டதாக ஆணையம் வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 5) தெரிவித்தது.

சோதனைக்கு முந்திய நாள், அதாவது ஜூன் 14ஆம் தேதியன்று, தனது இயந்திரக் கட்டுப்பாட்டை இழந்து, பாசிர் பாஞ்சாங் முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிங்கப்பூரின் ‘மரின் ஹானர்’ கப்பல்மீது மோதியது.

இதனால் 400 டன் எண்ணெய் கடலில் கசிந்து, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, லேப்ரடார் இயற்கை வனப்பகுதி, கெப்பல் பே, சதர்ன் தீவுகள், செந்தோசா போன்றவற்றிலுள்ள கடற்கரைப் பகுதிகளிலும் கோத்தா திங்கியில் ஜோகூர் கடலோரப் பகுதியிலும் எண்ணெய்த் திட்டுகள் படிந்தன.

இந்நிலையில், ஜூன் 15ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ‘வோக்ஸ் மாக்ஸிமா’ கப்பலில் 13 குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவ்விசாரணையானது பாதுகாப்பு, கடற்பகுதி மாசுத் தடுப்பு போன்றவை தொடர்பில் வெளிநாட்டுக் கப்பல்கள் அனைத்துலகத் தரநிலைகளை உறுதிசெய்வது தொடர்பானது என்றும் அதற்கும் ஜூன் 14ஆம் தேதி நிகழ்ந்த எண்ணெய்க்கசிவுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கும் சம்பந்தமில்லை என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

முன்னதாக, எண்ணெய்க்கசிவு சம்பவம் தொடர்பான விசாரணை முடியும்வரை அக்கப்பல் சிங்கப்பூர்க் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்