தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கட்டுமானத் தளங்களில் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணியிடைநிறுத்தத்திற்கு வலியுறுத்தல்

2 mins read
நான்கு மாதங்களில் 10 வேலையிட மரணங்களைத் தொடர்ந்து மனிதவள அமைச்சு நடவடிக்கை
1950cdd8-440a-4c13-ba80-138f21b37b2a
‘சியா’ கட்டுமான ஒப்பந்தத்தில் இயங்கி வரும் கட்டுமானத் தளம் ஒன்றில் மனிதவள அமைச்சு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  - படங்கள்: கீர்த்திகா ரவீந்திரன் 
multi-img1 of 3

கட்டுமானத் துறை நிறுவனங்கள் நவம்பர் 8ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதிக்குள் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணியிடைநிறுத்த (safety timeout) நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிக்குழு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.  

மனிதவள, தேசிய வளர்ச்சி, சுகாதார, போக்குவரத்து அமைச்சுகள் கட்டுமானத்துறை முதலாளிகளை இதற்கு ஊக்குவிக்கின்றன. 

இவ்வாண்டு ஜூலை மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடையே கட்டுமானத் துறையில் மொத்தம் 10 பேர் வேலையிடத்தில் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை ஆண்டின் முற்பாதியில் நிகழ்ந்த மரணங்களைப்போல் இரண்டு மடங்கு என்பதால் இத்தகைய பணியிடைநிறுத்தம் ஊக்குவிக்கப்படுகிறது.

உயரத்திலிருந்து ஊழியர்கள்மேல் விழுந்து, காயப்படுத்தக்கூடிய பொருள்கள், வாகனப் பாதுகாப்பு மற்றும் அதிகப் பளுவைக் கையாளும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம்.

அண்மையில் நடந்த மரணச் சம்பவங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட கவனத்துக்குரிய மூன்று அம்சங்கள் இவை என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது. 

‘சியா’ நிறுவனக் கட்டுமானத் தளம் ஒன்றில் நவம்பர் 7ஆம் தேதி மனிதவள அமைச்சின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் கலந்துகொண்ட மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மேம்பாடு கண்டிருந்தாலும் கட்டுமானத் துறையில் சற்று மெத்தனம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

“கட்டுமானத் துறையில் ஈடுபடும் அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பதும் பாதுகாப்புத் தரங்களைப் பராமரிப்பதும் முக்கியம். பாதுகாப்பை உறுதிசெய்யும் பணியிடை நிறுத்தம் அதை நிறைவேற்றப் பெரிதும் உதவும்,” என்று அவர் கூறினார்.  

ஆய்வு நடத்தப்பட்ட கட்டுமானத் தளத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து உடனடியாக வேலைநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

2024ஆம் ஆண்டின் முற்பாதியில் கட்டுமானத் துறையில் அதிக வேலையிட மரணங்கள் நிகழ்ந்தன. அதையடுத்து, கட்டுமானத் துறையில் வேலையிடப் பாதுகாப்பை மேம்படுத்த பல நடவடிக்கைகள் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன. 

இருப்பினும், கட்டுமானத் துறையின் வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கவலையளிப்பதாகவும் அக்டோபர் மாதம் முதல் கட்டுமானம் போன்ற துறைகளில் அதிகாரிகள் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் மனிதவள அமைச்சு கூறியது. 

குறிப்புச் சொற்கள்