பள்ளிவாசல்களின் ‘சலாம்எஸ்ஜி கிவ்ஸ்’ அன்பளிப்பு விநியோகம்வழி சிங்கப்பூரின் நான்கு மைய வட்டாரங்களில் 480 குறைந்த வருமானக் குடும்பங்கள் பயன்பெறவுள்ளன.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 30 விழுக்காட்டுக்கு மேல் அதிகம்.
சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (முயிஸ்) ஆதரவோடு பள்ளிவாசல்கள் ரமலான், குர்பான் சடங்கிற்காக வழிநடத்தும் ‘சலாம்எஸ்ஜி’ திட்டத்தின்கீழ் இவ்விநியோகம் நடைபெறுகிறது.
இதன் முதற்பகுதி, சனிக்கிழமை (பிப்ரவரி 22) காலை வடக்கு, கிழக்கு, மேற்கு வட்டாரங்களில் நடைபெற்றது. மார்ச் 15ஆம் தேதி தெற்கு வட்டாரத்திலும் விநியோகம் நடைபெறவுள்ளது.
“அமைப்புகளின் கூட்டுமுயற்சியுடன் கூடுதல் பயனாளிகளைச் சென்றடைவதால் இவ்வாண்டின் ‘சலாம்எஸ்ஜி கிவ்ஸ்’ திட்டம் சிறப்புமிக்கது. அதோடு, இது புனித ரமலான் மாதத்திற்கு முஸ்லிம் குடும்பங்களை உடலளவிலும் மனதளவிலும் தயார்ப்படுத்துகிறது,” என்றார் ‘சலாம்எஸ்ஜி ரமலான் 2025’ன் இணைத் தலைவர் ஃபைசல் அப்துல் ரஹீம்.
மேற்கு வட்டாரத்தில், இன, சமய நல்லிணக்க வட்டம், சுவா சூ காங் இந்தியர் நற்பணிச் செயற்குழு ஆகியவற்றோடு இணைந்து அல் கைர் பள்ளிவாசல், கிட்டத்தட்ட 160 குடும்பங்களுக்கு உணவுப்பொருள் பைகளை வீடு வீடாகச் சென்று விநியோகித்தது. இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 70 விழுக்காடு அதிகம்.
அந்த 160 குடும்பங்களில், பள்ளிப் பருவத்தில் உள்ள சிறுவர்களைக் கொண்ட 20 குடும்பங்களுக்கு ‘ஸாகாட்’ எனும் இஸ்லாமிய நன்கொடை வழிமுறைப்படி, மடக்கக்கூடிய மேசைகள், நாற்காலிகள் வழங்கப்பட்டன. அவற்றை சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக முஸ்லிம் சமூகத் தொண்டூழியர்கள் விநியோகித்ததுடன் சிறுவர்களை ஊக்குவிக்கவும் முற்பட்டனர்.
இவ்வாண்டின் புதிய அம்சமாக, பயனாளிகளில் முஸ்லிம்கள் மட்டுமன்றி முஸ்லிம் அல்லாதவர்களும் இடம்பெற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
விநியோகத்திற்கு சுவா சூ காங் நாடாளுமன்ற உறுப்பினர்களான துணைப் பிரதமர் கான் கிம் யோங், ஜூல்கர்னெய்ன் அப்துல் ரஹீம், டோன் வீ ஆகியோரும் வருகையளித்தனர்.
“பட்ஜெட் 2025ன் நோக்கங்களில் ஒன்று, அன்பான அனைவரையும் உள்ளடக்கும் சமூகத்தை வளர்ப்பதாகும். இம்முயற்சி அதற்கு உதவுகிறது,” எனப் பாராட்டினார் திரு கான்.
“அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க இவ்விநியோகம் உதவும்,” என்றார் ஸ்ரீ அரசகேசரி சிவன் கோவில் தலைவர் கருணாகரன், 78.
பள்ளிவாசலில் கற்றல் பயணம்
விநியோகம் தொடங்குவதற்குமுன் பள்ளிவாசல் கற்றல் பயணம் ஒன்றையும் நடத்தியது. வருகையளித்தோர் பள்ளிவாசலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
முதலில் பள்ளிவாசல்கள் களிமண்ணால் கட்டப்படுதல், அதன்பின்பு வந்த நாகரிகங்களின் தாக்கத்தால் மற்ற வடிவமைப்புகள் அறிமுகமாதல், பள்ளிவாசல் வழிமுறைகள் போன்ற பல கூறுகளை இமாம் மக்களுடன் பகிர்ந்துகொண்டார்.
“நான் கடைசியாகப் பள்ளிவாசலுக்கு வந்தது, சிறுவயதில் கற்றல் பயணங்கள் வழியாகத்தான். இப்பொழுது, தகவல்களை நன்கு புரிந்துகொள்ளும் வயதில் இருக்கிறேன். குவிமாடம் அழகுக்காகக் கட்டப்படுவது என நினைத்தேன். ஆனால், மற்ற காரணங்களும் உள்ளன எனத் தெரிந்துகொண்டேன். இளையர்கள் மற்ற சமயங்களைப் பற்றி அறிந்துகொள்வது முக்கியம். மற்ற நண்பர்களிடமும் நான் கற்றவற்றைப் பகிர்வேன்,” என்றார் டவீனா ஜோசஃப் ஸ்டீவன், 24.