கடினமான முடிவுகளைத் துணிவுடன் எடுப்பதே அரசின் தலையாய பொறுப்பு: பிரதமர் வோங்

மக்கள் செயல் கட்சி மாநாடு 2026

கடினமான முடிவுகளைத் துணிவுடன் எடுப்பதே அரசின் தலையாய பொறுப்பு: பிரதமர் வோங்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Oct 2026 - 1:40 pm

2 mins read

அரசியல் பதவி வகிப்போரின் சம்பளத்தை உயர்த்துவது முதல் கட்சியின் செயல்பாடுகளை மின்னிலக்கமயமாக்குவது வரை, துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளருமான திரு வோங், அரசியல் ரீதியாக வசதியான முடிவுகளை விட, நாட்டின் எதிர்காலத்திற்குத் தேவையான கடினமான முடிவுகளைத் துணிவுடன் எடுப்பதே ஓர் அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு என்றும்  தெரிவித்தார். 

எளிய அல்லது கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை மட்டுமே தந்துவிட்டு விவகாரங்களைத் தள்ளிப்போடாமல், எதிர்வரும் தலைமுறையினருக்காகத் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்வதே கட்சியின் அடிப்படை அணுகுமுறை என்றும் அவர் கூறினார்.   

ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மசெக மாநாடு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) நடைபெற்றது.

மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், அரசியல்வாதிகளின் சம்பளத்தைச் சீரமைக்கும் விவகாரத்தைத் துணிச்சலான முடிவுக்கு ஒரு முக்கிய உதாரணமாகக் குறிப்பிட்டார்.

“இதுபோன்ற விவகாரங்கள் மக்களிடையே கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதால், அரசியல் ரீதியாக இதைத் தவிர்த்துவிடுவதே மிகவும் சௌகரியமான ஒன்றாக இருந்திருக்கும் என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும், சிங்கப்பூரின் எதிர்காலத்தை வழிநடத்தக்கூடிய தகுதியான, வலுவான தலைமைக் குழுவை உருவாக்க வேண்டியது இன்றியமையாதது என்றார்.

எனவே, இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் தாமே வெளிப்படையாக முன்வைத்து, அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டதாக அவர் சொன்னார்.

கடினமான முடிவுகளைத் தள்ளிப்போடுவதால் பிரச்சினைகள் தானாக மறைந்துவிடாது என்றும் மாறாக, எதிர்காலத் தலைமுறையினருக்கு அது இன்னும் கடுமையான சுமையையே விட்டுச் செல்லும் என்றும் விளக்கினார் திரு வோங்.

“அதேவேளையில், அரசாங்கத்திற்கு எல்லாம் தெரியும் என்ற மனப்பான்மையைத் தவிர்த்து, தொடர்ந்து தன்னை மாற்றியமைத்துக்கொண்டு மக்களுடன் அணுக்கமாகச் செயல்பட வேண்டும்,” என்பதையும் திரு வோங் சுட்டிக்காட்டினார். 

தொழில்நுட்பப் பாய்ச்சல் - மின்னிலக்க உறுப்பினர் அட்டை

முன்னதாக, மாநாட்டில் கட்சித் தொண்டர்களுக்கான முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார் பிரதமர்.

கட்சியை நவீனமயமாக்கி தொண்டர்களை மேலும் ஒருங்கிணைக்கும் வகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிஏபி எஸ்ஜி’ செயலியில் புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதாக திரு வோங் தெரிவித்தார்.

அதன்படி, இன்று முதல் அனைத்து உறுப்பினர்களும் தங்களின் மின்னிலக்க உறுப்பினர் அட்டைகளை இச்செயலி வாயிலாக அணுக முடியும் என்பதோடு, உறுப்பினர் பதிவைப் புதுப்பிப்பதும் கிளைகள் வழியாகப் புதிய உறுப்பினர்களை நேரடியாக மின்னிலக்க வழியில் இணைப்பதும் சாத்தியமாக்கப்பட்டுள்ளது.   

கட்சி உறுப்பினர்களாக இணையாத, ஆனால் சமுதாயத்திற்குப் பங்களிக்க விரும்பும் வெவ்வேறு தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் ‘ஃபிரென்ட்ஸ் ஆஃப் தி பிஏபி’ மூலம் கட்சி தனது தளத்தை விரிவுபடுத்தி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 

மாறுபட்ட கருத்துகளையும் அனுபவங்களையும் கொண்ட சிங்கப்பூரர்களை அரவணைத்து, பரந்த தளத்தில் இயங்கும் மக்கள் இயக்கமாக மசெக தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளும் என்றும் நாட்டின் எதிர்காலப் பயணத்தில் அனைவரும் கைகோக்க வேண்டும் என்றும் மாநாட்டில் அழைப்பு விடுத்தார்.  

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மக்கள் செயல் கட்சிபிரதமர்அரசியல்