சாங்கி விமான நிலையத்தில் பணியாற்றும் சக்கர நாற்காலி உதவியாளர் ஒருவர் தனது வேலைக்கு 11 விநாடிகள் தாமதமாக வந்துள்ளார்.
ஆனால், அதற்காக அவரது சம்பளத்திலிருந்து 5 வெள்ளி பிடிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு மணி நேரத்திற்கு 7 வெள்ளி சம்பாதிக்கிறார். இந்தப் பிடித்தம் ஏறக்குறைய அவரது ஒரு மணி நேரச் சம்பளத்திற்குச் சமமாகும்.
இந்தச் சம்பவம் தொடர்பாக லிங்டின் சமூக ஊடகத்தில் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மனிதவள அமைச்சு அந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஊழியரின் நிறுவனமான அவென்டா சர்விசஸ் தரப்பை அமைச்சு தொடர்புகொண்டுள்ளது. இந்தப் பிடித்தம் விதிகளுக்கு முரணானதா அல்லது அதிகப்படியானதா என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
வேலைவாய்ப்புச் சட்டத்தின்படி, ஊழியர்கள் தாமதமாக வந்தால் நிறுவனங்கள் சம்பளத்தைப் பிடிக்கலாம். ஆனால், தாமதமான நேரத்திற்கு ஏற்பவே அந்தப் பிடித்தம் இருக்க வேண்டும். அதிகப்படியான தொகையை அபராதமாகப் பிடிக்கக் கூடாது.
விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது அமைச்சு தகுந்த அமலாக்க நடவடிக்கைகளை எடுக்கும். கடுமையான குற்றமாக இருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படலாம்.
இந்நிலையில், தனது சேவைப் பங்காளிகள் வேலைவாய்ப்புச் சட்டங்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என சாட்ஸ் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.


