சம்பளம் தாமதம்: ‘இல்ஹாம் சைல்ட் கேர்’ நடத்தும் நிறுவனத்திடம் விசாரணை

சம்பளம் தாமதம்: ‘இல்ஹாம் சைல்ட் கேர்’ நடத்தும் நிறுவனத்திடம் விசாரணை

படம்: கூகல் மேப்ஸ்

16 Nov 2026 - 4:19 pm

2 mins read

சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக ஊழியர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, ‘இல்ஹாம் சைல்ட் கேர்’ பாலர் பள்ளியை நடத்தும் நிறுவனத்திடம் மனிதவள அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.

வேலை நியமனச் சட்டத்தின்கீழ் சம்பளம் வழங்காத குற்றம் நடந்ததா என அமைச்சு ஆராய்கிறது. ஜூன், செப்டம்பர் மாதங்களில் சம்பளம் தாமதமானதாகச் சில ஊழியர்கள் கூறியதை அடுத்து, பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பும் இந்த விவகாரத்தை விசாரிக்கிறது.

சம்பளத் தாமதத்தால் நிலையங்களில் பிள்ளைகளின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிசெய்ய முடியுமா என அந்த அமைப்பு மதிப்பிடுகிறது.

சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணியிடம் சம்பளக் கோரிக்கைகளை முன்வைக்குமாறு பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மனிதவள அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

நவம்பர் 13ஆம் தேதிவரை அக்கூட்டணிக்கு எவ்விதக் கோரிக்கையும் வரவில்லை என அமைச்சு திங்கட்கிழமை (நவம்பர் 16) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

ஆயினும், 2026ஆம் ஆண்டில் மூன்று முறை சம்பளம் தாமதமானதாகத் தெரிவித்த இரு முன்னாள் ஊழியர்கள் கோரிக்கை மனுக்களைத் தாக்கல் செய்து வருவதாகத் தெரிவித்தனர்.

நிதி நெருக்கடியால் ஜூன், செப்டம்பர் மாதங்களில் பாதிச் சம்பளமே முதலில் அந்நிறுவனம் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதச் சம்பளத்தை வழக்கமான நாளான நவம்பர் 5ஆம் தேதி வழங்க இயலாது எனவும் நவம்பர் 25ஆம் தேதிக்குள் வழங்கப்படும் எனவும் ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அந்நிறுவனம் தற்போது பூன்லே வே, உபி ஆகிய இடங்களில் இரு நிலையங்களை நடத்துகிறது.

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் செயல்பட்ட மூன்றாவது நிலையம் வாடகை உயர்வு உள்ளிட்ட சவால்களால் ஆகஸ்ட் 6ஆம் தேதி மூடப்பட்டது. இதனால், 38 பிள்ளைகளும் எட்டு ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர்.

உட்லண்ட்ஸ் நிலையம் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்குக் கட்டணங்களைத் திருப்பித் தருமாறு பிறப்பித்த உத்தரவுகளை நிறுவனம் பின்பற்றுகிறதா என அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.

சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என முதலாளிகளுக்கு மனிதவள அமைச்சு நினைவூட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணி மூலம் சம்பளத்தைப் பெறலாம் அல்லது வேலை நியமனக் கோரிக்கைத் தீர்ப்பாயத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்