ஒருவரிடம் 1,300 வெள்ளிக்கும் அதிக மதிப்பிலான மின்சிகரெட் பொருள்களை விற்றதாக நிக்கலஸ் டான் ஜியா பியாவ், 31, என்ற ஆடவர் வியாழக்கிழமை (ஜூலை 24) மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
மின்சிகரெட் பொருள்களை வைத்திருந்ததாகவும் விற்றதாகவும் அவர் மீது ஒன்பது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சென்ற ஆண்டு செப்டம்பரிலிருந்து அக்டோபர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் அவர் 34 கட்டுகள் மின்சிகரெட் கருவிகளையும் குறைந்தது ஐந்து மின்சிகரெட் போட் (pod) கருவிகளையும் விற்றதாக நம்பப்படுகிறது.
டான், சென்ற ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி இரவு 9.50 மணிக்கு சற்று முன்பு சிட்டாடின்ஸ் பேலஸ்டியர் சிங்கப்பூர் ஹோட்டலில் இருந்தார்.
அப்போது அவர் 300 வெள்ளி மதிப்பிலான மின்சிகரெட் போட்களை ஒருவரிடம் விற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மறுநாள் அதிகாலை 5.20 மணியளவில் அதே ஹோட்டலில் அவர் மொத்தம் 480 வெள்ளி மதிப்பிலான மேலும் நான்கு போட்களையும் ஒரு மின்சிகரெட் கருவியையும் அதே நபரிடம் விற்றதாகக் கூறப்படுகிறது.
அன்றைய தினம் பிற்பகலில் டான், டெலிகிராம் செயலி வழியாக தனக்குத் தெரியாத ஒருவரிடமிருந்து 1,000 வெள்ளி மதிப்பிலான 10 மின்சிகரெட் போட்களை வாங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.
அக்டோபர் மூன்றாம் தேதி இரவு சுமார் 11 மணிக்கு அவர் அத்தகைய நான்கு போட்களையும் இரண்டு மின்சிகரெட் கருவிகளையும் அதே நபரிடம் விற்றதாக நம்பப்படுகிறது. அவற்றின் மொத்த மதிப்பு 535 வெள்ளி.
தொடர்புடைய செய்திகள்
மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு சற்று முன்பு டான் தன்வசம் இரு கட்டுகள் மின்சிகரெட் கருவிகளை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.