மடக்குக் கத்தி, கையின் முட்டிக்காப்பு (knuckleduster) போன்றவற்றின் விற்பனை ஒழுங்குப்படுத்தப்பட்ட ஆறு ஆயுதங்களின் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு பல்வேறு கத்தித் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக உள்துறை துணை அமைச்சர் சுன் சூவெலிங் கூறினார்.
தற்போதைய நிலையில் வாள், குத்துவாள், ஈட்டி, ஈட்டிமுனை, துப்பாக்கிமுனை கத்தி, ஆபத்தை விளைவிக்கும் வில் மற்றும் அம்புகள் போன்றவற்றை, ஆயுதம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின்கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட பட்டியலில் உள்துறை அமைச்சு வைத்துள்ளது.
இவ்வாண்டின் முதல் பாதியில் துப்பாக்கி, வெடிபொருள் மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டுச் சட்டம் நடப்புக்கு வரும்போது இவற்றுடன் மடக்குக்கத்தியும் முட்டிக்காப்பும் அச்சட்டத்தின்கீழ் கொண்டு வரப்படும் என்றார் திருவாட்டி சுன்.
கத்தித் தாக்குதல் போன்ற சம்பங்கள் நிகழும் சூழலில் சிங்கப்பூரர்களைப் பாதுகாக்க அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன என்று ஜூரோங் குழுத்தொகுதி உறுப்பினர் டாக்டர் டான் வூ மெங்கும் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி உறுப்பினர் கிறிஸ்டஃபர் டி சூஸாவும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
2024 நவம்பர் 9ஆம் தேதி செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் பாதிரியார் ஒருவரின் வாயில் கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தக் கேள்வியை அவர்கள் கேட்டு இருந்தனர்.
இந்நிலையில், 2024 ஜனவரி தொடங்கி நவம்பர் வரை சிங்கப்பூரில் கத்தி தொடர்பான 129 சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் அவற்றில் கொலை, கொலைமுயற்சி, கொள்ளை, கலவரம், கடுமையான காயம் ஏற்படுத்திய சம்பவம் போன்றவை அடங்கும் என்றும் திருவாட்டி சுன் தமது பதிலில் குறிப்பிட்டார்.