வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் 5,547 பிடிஓ வீடுகளுக்கான விற்பனையை புதன்கிழமை (ஜூலை 23) தொடங்கியுள்ளது. அந்த விற்பனை மொத்தம் எட்டு பிடிஓ திட்டங்களை உள்ளடக்கியது.
புக்கிட் மேரா, புக்கிட் பாஞ்சாங், கிளமெண்டி, செம்பவாங், தெம்பனிஸ், தோ பாயோ, உட்லண்ட்ஸ் ஆகிய ஏழு வட்டாரங்களுடன் புதிய செம்பவாங் நார்த் குடியிருப்புப் பேட்டைக்கான வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இம்மாத பிடிஓ விற்பனைத் திட்டத்திலிருந்து புதிய குடும்பப் பராமரிப்புத் திட்டம் நடப்புக்கு வரும். அந்தத் திட்டத்தின்கீழ் முதல்முறை வீடு வாங்கும் ஒற்றையருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தங்களது பெற்றோருடன் அல்லது பெற்றோர் வீட்டுக்கு அருகில் ஈரறை ஃபிளெக்ஸி வீடுகளை வாங்கும்போது ஒற்றையருக்கான ஒதுக்கீட்டில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பிடிஓ வீடுகள் தவிர, 4,662 எஞ்சிய வீடுகளுக்கான விற்பனையும் தொடங்கி உள்ளது.
அந்த வீடுகளில் 1,733 வீடுகள் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு குடியேறும் நிலையில் உள்ளவை.
எஞ்சிய வீடுகளின் விற்பனைத் (SBF) திட்டத்தில் காலாங்/வாம்போ, தெங்கா மற்றும் கேலாங் வட்டார வீடுகள் அதிகம் உள்ளன.
புதன்கிழமை தொடங்கப்பட்டு உள்ள விற்பனை நடவடிக்கையில் பல்வேறு கொள்கை மாற்றங்கள் இடம்பெறும்.
தொடர்புடைய செய்திகள்
மேம்பட்ட வீடுகளையும் சரியான அளவுள்ள வீடுகளையும் நாடும் ஒற்றையருக்கும் குடும்பங்களுக்கும் பலனளிக்கும் விதத்தில் அந்த மாற்றங்கள் இருக்கும்.
அதிகமான சிங்கப்பூரர்களுக்குப் பலனளிக்கும் விதமாக நான்கு பிரைம் திட்டங்களுக்கான உதவிமானியங்களை அதிகரிக்க இருப்பதாக வீவக அறிவித்து உள்ளது. அந்த பிரைம் திட்டங்கள் புக்கிட் மேரா, தோ பாயோ மற்றும் கிளமெண்டி வட்டாரங்களைச் சேர்ந்தவை.
இருப்பினும், எந்த அளவுக்கு அதிகமாக உதவிமானியம் இருக்கும் என்பதை வீவக குறிப்பிடவில்லை.
செம்பவாங் நார்த் குடியிருப்பு வட்டாரத்தில் முதல்முறை பிடிஓ திட்டம் அறிமுகம் காண்கிறது. செம்பவாங் பீக்கன் எனப்படும் அந்தத் திட்டத்தில் 775 ஈரறை, மூவறை, நாலறை மற்றும் ஐந்தறை வீடுகள் இடம்பெறும்.
அவற்றுடன், அட்மிரல்டி லிங்க், அட்மிரல்டி லேன் மற்றும் கேன்பரா ரோடு வட்டாரங்களைச் சூழ்ந்த பகுதிகளில் மூன்று தலைமுறை வீடுகளும் அமையும்.
செம்பவாங் பீக்கன் திட்டம் மூன்றாண்டு காத்திருப்புக் காலத்தைக் கொண்டது. செம்பவாங் எம்ஆர்டி நிலையம், அக்கம்பக்கப் பூங்கா போன்ற வசதிகளுக்கு அருகே அந்தத் திட்டத்தின் வீடுகள் கட்டப்பட உள்ளன.
புதிய வீடுகளுக்கான விலையையும் வீவக அறிவித்து உள்ளது.
ஈரறை ஃபிளெக்ஸி வீட்டின் விலை $148,000 முதல் $207,000 வரை. மூவறை வீட்டின் விலை $267,000 முதல் $323,000 வரை. நாலறை வீட்டின் விலை $328,000 முதல் $413,000 வரை. ஐந்தறை வீட்டின் விலை $487,000 முதல் $586,000. மூன்று தலைமுறை வீட்டின் விலை $497,000 முதல் $585,000 வரை என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த விலைகளில் உதவிமானியம் சேர்க்கப்படவில்லை.