ஃபேர்பிரைஸ் குழுமத்தின் சொந்த தயாரிப்புகளின் விற்பனை மூலம் 2024ல் கிட்டத்தட்ட $1 பில்லியன் வருவாய் ஈட்டப்பட்டது.
2022ல் $500 மில்லியனாக இருந்த அந்த வருவாய், 2030ல்தான் $1 பில்லியனாக இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 2024ல் இந்த இலக்கை எட்டும் தூரத்தில் வருவாய் ஈட்டப்பட்டது.
எழுபதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் 3,500க்கும் அதிகமான பொருள்களைக் கொண்டுள்ள சொந்த தயாரிப்பு வகை மலேசியா, தாய்லாந்து, தென்கொரியா, நார்வே, சிங்கப்பூர் உட்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகிறது.
அரிசி, சமையல் எண்ணெய், கழிவறைத் தாளில் தொடங்கி சுவையூட்டப்பட்ட பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு சிப்ஸ் வரையிலான சொந்த தயாரிப்புகளின் விலைகள், மற்ற வகை பொருள்களைவிட 10 முதல் 15 விழுக்காடு வரை குறைவு. பொருள்களின் விலைகள் கட்டுப்படியாக இருப்பதை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களிடையே இவை பிரபலமாக உள்ளன.
ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் விற்கப்படும் ஏறக்குறைய 20 விழுக்காட்டுப் பொருள்கள், சொந்த தயாரிப்புகளாகும். எடுத்துக்காட்டாக, மெல்லிழைத் தாள், கழிவறைத் தாள், சமையலறைத் தாள் போன்ற தாள் பொருள்களில் பாதியவு ஃபேர்பிரைஸ் குழுமத்துக்குச் சொந்தமானவை.
வாழ்க்கைச் செலவினம் குறித்து கவலையுறும் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருள்களில், ஃபேர்பிரைசின் சொந்த தயாரிப்புகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.