புதிய தனியார் வீடுகளின் விற்பனை ஒன்பது மாத உச்சத்தைத் தொட்டது

2 mins read
98e31758-ffb5-4de2-8ff4-0baaff0e5420
எக்சகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகளையும் சேர்த்து 2,338 புதிய தனியார் வீடுகள் ஆகஸ்ட் மாதம் விற்கப்பட்டன. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் புதிய தனியார் வீடுகள், சென்ற மாதம் அதிகரித்தன. ‘ஹங்ரி கோஸ்ட்’ விழாவுக்கு முன்னரே ஐந்து தனியார் வீடமைப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டது அதற்கு முக்கிய காரணம்.

குறைந்த அடைமானக் கடன் வட்டி விகிதம் அந்த விற்பனை அதிகரிப்புக்குத் துணை புரிந்தது.

தனியார் வீடுகள் அவ்வளவாகக் காணப்படாத பகுதிகளில் அண்மைய ஆண்டுகளாக அடுத்தடுத்து தொடங்கப்பட்டு வரும் புதிய தனியார் வீட்டுத் திட்டங்கள் வலுவான நிலவரத்தை ஏற்படுத்தி இருப்பதாக ‘இஆர்ஏ’ சிங்கப்பூர் சொத்துச் சந்தை நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க்கஸ் சு தெரிவித்துள்ளார்.

மற்றொரு சொத்துச் சந்தை நிறுவனமான ‘கஷ்மன் அண்ட் வேக்ஃபீல்டி’ன் சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்காசிய வட்டாரங்களுக்கான ஆய்வுப் பிரிவுத் தலைவர் வோங் ஸியான் யாங்கும் சில காரணங்களை அடுக்கி உள்ளார்.

“மூன்றாம் காலாண்டின் முதல் இரு மாதங்களில் புதிய வீடுகளின் விற்பனை அமோகமாக இருந்தது. அதன் காரணமாக, முழுமையடையாத, விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

“முந்திய காலாண்டில் 18,498ஆக இருந்த அந்த வீடுகளின் எண்ணிக்கை, விற்பனை ஏற்றம் காரணமாக 18,000க்குக் கீழ் இறங்கியது.

“அவ்வாறு விற்கப்படாமல் இருந்த வீடுகளின் எண்ணிக்கை 2024 நான்காம் காலாண்டில் 19,405ஆக இருந்தது,” என்றார் அவர்.

ஆகஸ்ட் மாதம் 2,142 புதிய தனியார் வீடுகள் விற்பனை ஆயின. 2024 நவம்பருக்குப் பிறகு இதுவே ஆக அதிகமான மாதாந்தர விற்பனை. அதாவது, ஒன்பது மாத உச்சத்தைத் தொட்டுள்ளது விற்பனை. எக்சகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகளையும் சேர்த்து 2,338 புதிய தனியார் வீடுகள் அந்த மாதத்தில் விற்கப்பட்டன.

2024 நவம்பர் மாதம் விற்கப்பட்ட புதிய தனியார் வீடுகளின் எண்ணிக்கை 2,560.

கடந்த ஜூலை மாதம் 940 வீடுகளே விற்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் விற்பனை 128% என்னும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது.

பொதுவாக ‘ஹங்ரி கோஸ்ட்’ மாதம் சுபகாரியங்களுக்கு ஏற்றதில்லை என்பது சிலரின் நம்பிக்கை. அதனால் அந்த மாதத்தில் புதிய வீடுகளை வாங்க சிலர் யோசிப்பதுண்டு.

‘ஹங்ரி கோஸ்ட்’ காலம் தொடங்குவதற்கு முன்னர், ஆகஸ்ட் மாதத்தில் 2,496 புதிய வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டது. இது ஜூலை மாதத்தைக் காட்டிலும் 49 விழுக்காடு அதிகம்.

குறிப்புச் சொற்கள்