சிங்கப்பூர் கலை அரும்பொருளகம் தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. அருங்காட்சியகம் செயல்பட்டுவரும் இடத்தை தற்போதைக்கு மாற்றும் திட்டமில்லை எனக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் கலைத்துறைக்கான நாடாளுமன்ற நியமன உறுப்பினர் உஷா சந்திரதாசின் கேள்விக்கு புதன்கிழமை (மே 8) எழுத்துபூர்வமாக பதிலளிக்கும்போது தெரிவித்தார்.
மேலும், அரும்பொருளகம் முன்னர் செயல்பட்டுவந்த பழைய செயின்ட் ஜோசப் கல்வி நிலையக் கட்டடத்திற்கு மாற்றும் திட்டங்கள் பரிசீலிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
அவரது அமைச்சு பாரம்பரிய கட்டடத்திற்கான சாத்தியமான பயன்பாடுகளை மதிப்பீடு செய்து வருகிறது என்றும் கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட்டவுடன் பகிர்ந்துகொள்ளப்படும் என்றும் திரு டோங் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, தேசிய நினைவுச் சின்னமான பழைய செயின்ட் ஜோசப் கல்வி நிலையக் கட்டடத்தின் மறுவடிவமைப்பு 2026ஆம் ஆண்டு முடிவடையும் என்றும் அதற்குப் பிறகு சிங்கப்பூர் கலை அரும்பொருளகம் அக்கட்டடத்திற்கு மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

