காயங்களால் கடமான் மரணம்; வாகனம் மோதியிருக்கலாம் என ஐயம்

1 mins read
3e0a00d5-8be0-4432-84cc-798a5e2a587b
காயமடைந்து விழுந்து கிடந்த கடமான். - படம்: ஃபேஸ்புக்/கேரன் சிம்

டெய்ரி ஃபார்ம் பகுதிக்கு அருகேயுள்ள ஓர் இயற்கைப் பூங்காவிற்கு அருகே காயமடைந்து கிடந்த கடமான் இறந்துவிட்டது.

அந்தக் கடமான் காயமடைந்து கிடந்ததை மலையேறிகள் கண்டுபிடித்தனர். வாகனம் மோதியதால் அது காயமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

செஸ்ட்நட் இயற்கைப் பூங்காவின் மலையேற்றத் தடத்தில் மான் ஒன்று காயமடைந்து கிடப்பதாகச் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) காலை 10 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகத் தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்தது.

சற்று நேரத்தில் தமது குழுவினர் அவ்விடத்திற்குச் சென்றதாகக் கழகத்தின் வனவுயிர் மேலாண்மை இயக்குநர் ஹோ சூன் பெங் கூறினார்.

“அந்த மான் வாகனம் மோதியதால் ஏற்பட்டது போன்று கடுமையாகக் காயமடைந்திருந்தது. பின்னர் அது இறந்துவிட்டதால் அதன் உடல் அங்கிருந்து அகற்றப்பட்டது,” என்று திரு ஹோ தெரிவித்தார்.

குறிப்பாக, இருபுறமும் காடுகள் உள்ள நிலையில் விலங்குகள் சாலையைக் கடக்கும்போது வாகனவோட்டிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் விலங்குகள் கடக்கலாம் என்பதைக் குறித்து வாகனவோட்டிகளுக்கு விழிப்பூட்ட அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

சம்பவம் குறித்து எஸ்ஜி வைல்டுலைஃப் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள காணொளியில், பக்கவாட்டில் விழுந்து கிடந்த அந்த மான் தனது கால்களை உதைத்தபடி இருந்ததையும் அதன் வலது முன்னங்காலிலிருந்து ரத்தம் வடிந்திருந்ததையும் காண முடிந்தது.

குறிப்புச் சொற்கள்