சாம்சுங் ஆண்ட்ராய்ட் சாதனங்களைப் பயன்படுத்துவோர் மென்பொருளைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு (சிஎஸ்ஏ) அறிவுறுத்தியுள்ளது.
ஆண்ட்ராய்ட் 13, 14, 15, 16 ஆகியவற்றைப் பயன்படுத்தும் மில்லியன் கணக்கான சாம்சுங் சாதனங்களில் மோசமான பாதிப்பு ஆபத்தைத் தடுக்கும் பாதுகாப்பு புதுப்பிப்புகளை தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்துவோர் தங்கள் சாதனங்களில் செப்டம்பரில் வழங்கப்பட்ட மென்பொருள் புதுப்பிப்பை சரிபார்க்க வேண்டும்.
தொலைவிலிருந்து சாதனத்தை அணுகுவதற்கும், பயனருக்குத் தெரியாமல் தீங்குநிரல் குறியீட்டை நிறுவுவதற்கும் சிவிஇ-2025-21043 பயன்படுத்தப்படலாம். அது சரிசெய்யப்படாவிட்டால், இணையக் குற்றவாளிகள் அதிலுள்ள ரகசியத் தரவுகளையும் வங்கிக் கணக்கு விவரங்களையும் திருடக்கூடும்.
பாதிக்கப்பட்ட தயாரிப்பு பதிப்புகளைப் பயன்படுத்துவோர் அண்மைய பதிப்புகளை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும் என்று சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தியது.
சாம்சுங்சின் முதன்மை சாதனங்களான கேலக்ஸி S25, கேலக்ஸி Z Fold7, கேலக்ஸி A56 5G ஆகியவை புதுப்பிக்கப்பட வேண்டிய சாதனங்களில் அடங்கும்.
இந்தப் பாதிப்புகுறித்து சாம்சுங் நிறுவனத்திற்கு ஆகஸ்ட் 13ஆம் தேதி தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்படக்கூடிய தன்மை எவ்வாறு மோசடிக்காரர்களால் பயன்படுத்தப்படும் என்பதை சாம்சங் விவரிக்கவில்லை. எனினும் பாதிக்கும் ஆபத்துள்ளதை ஒப்புக்கொண்டது.