சிங்கப்பூரில் மோசடிக் குற்றங்களுக்காக விசாரிக்கப்படும் 1,200 நபர்களுடன் 50 அமைப்புகளும் அவர்களின் வங்கிக் கணக்குகள், சிங்பாஸ் இணைப்புகள், போன்ற பல வசதிகளைப் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் க. சண்முகம் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிமை (ஜனவரி 13) தெரிவித்துள்ளார்.
மோசடிக் குற்றங்களின் விராரணை முடியும்வரை சந்தேக நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் புதிய தொலைத்தொடர்பு இணைப்பு, இணையத்தில் வங்கி, நிதி சார்ந்த சேவைகள், கட்டண அட்டைகள் பயன்பாடு, தானியங்கி வங்கி இயந்திரப் பரிவர்த்தனை (ஏடிஎம்) போன்ற பல சேவைகளை ஏற்படுத்திக் கொள்ளும் வசதிகள் கட்டுப்படுத்தப்படும் எனவும் உள்துறை அமைச்சருமான திரு சண்முகம் தெரிவித்தார்.
இதுபோன்ற வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான தடை கடந்த அக்டோபர் மாதம் அமலுக்கு வந்ததில் இருந்து பல நேர்மறை விளைவுகள் நடந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
கடந்த 2024ஆம் ஆண்டில் $1.1 பில்லியன் மோசடி காரணமாக இழக்கப்பட்ட நிலையில், மோசடிக் குற்றங்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் புதிதாக அமலுக்கு வந்தவுடன், 2025ஆம் ஆண்டு நவம்பர் 30 வரையில் அது $840.3 மில்லியனாகக் குறைந்துள்ளது.
விசாரிக்கப்படுவோரில் மோசடிக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டோரும் மோசடிகள் மேலும் நடக்க உதவக்கூடியோர் என வகைப்படுத்தப்பட்டோரும் அடங்குவர்.
நீசூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேக்சன் லாம் மோசடிக்காரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து திங்கட்கிழமை எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சண்முகம் பதிலளித்தபோது இந்த விவரங்களை வெளியிட்டார்.
அக்டோபர் மாதம் முதல், வசதிகளைக் கட்டுப்படுத்தும் கட்டமைப்பு (Facility Restriction Framework) கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மோசடிகளுக்கு உதவுவோரைக் குறிவைத்து நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம், இணையத்திலும் தொலைபேசியிலும் நிதிச்சேவைகள், கட்டண அட்டைகள் சார்ந்த பரிவர்த்தனைகள், ஏடிஎம் வசதிகள் போன்றவற்றை அவர்கள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துகிறது.
தொடர்புடைய செய்திகள்
புதிய தொலைபேசி இணைப்புகளை அவர்கள் ஏற்படுத்த முடியாது. சிங்பாஸ்/கோர்பாஸ் போன்ற மறைச்சொல் வழியாக அவர்கள் இணையச் சேவைகளை நாடமுடியாது, புதிய வங்கிக் கணக்குகளைத் தொடங்கமுடியாது.
திரு லாம்மின் கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த திரு சண்முகம், விசாரிக்கப்படும் நபர்கள், அமைப்புகள் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கையை வெளியிட்டார். தொடக்கத்தில் நேர்மறை விளைவுகள் காணப்பட்டாலும் கட்டுப்பாடுகள் எந்த அளவு உதவியுள்ளது என்பதை முழுவதும் கணிக்க அதிக கால அவகாசம் தேவைப்படும் எனவும் அவர் விளக்கினார்.
விசாரணையின் முடிவுகள் வெளிவரும் வரை சந்தேக நபர்களுக்கான தடைகள் அமலில் இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், சிங்கப்பூரில் மோசடிக் குற்றங்கள் தொடர்ந்து கவனத்துக்குரிய நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

