நிகழ்த்துகலை வடிவில் சங்க இலக்கியக் கதைகள்

பண்டைய தமிழ் இலக்கியத்தின் பன்முகத்தன்மை 

நிகழ்த்துகலை வடிவில் சங்க இலக்கியக் கதைகள்

2 mins read
c6992377-bc9b-4ab9-a20b-723470978f88
சிலப்பதிகாரத்தின் ‘வழக்குரைக் காதை’ காட்சிப்படுத்தப்படுகிறது. - படம்: வாழ்வியல் இலக்கியப் பொழில்

போட்டி அங்கங்களும் ஆடல் பாடல்களும் கொண்டிருந்த நிகழ்ச்சி ஒன்று பல்வேறு வயதினரிடையே இலக்கியத்தின் மீதான ஈடுபாட்டை ஊக்குவித்துப் பண்டைய தமிழ் இலக்கியக் கூறுகளைப் புகட்ட முற்பட்டது.

அத்துடன், சீறாப்புராணம் உள்ளிட்ட அரிய இலக்கியங்களின் தகவல்களும் சிற்றுரைகள்வழி பகிரப்பட்டன.

‘பொழில் இலக்கியச் சங்கமம் 2026’ என்ற அந்த நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) நடைபெற்றது.

தமிழ்ப் பற்றுப் பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கியதை அடுத்து, முன்னதாக நடத்தப்பட்ட போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் ஏற்பாட்டில் 9வது ஆண்டாக நடைபெற்றது.

பங்கேற்ற சிறார்களுக்குச் சான்றிதழ் பரிசுகள்.
பங்கேற்ற சிறார்களுக்குச் சான்றிதழ் பரிசுகள். - படம்: வாழ்வியல் இலக்கியப் பொழில்

புறநானூற்றுப் பாடலின் அடிப்படையிலான ஓரங்க நாடகம்முதல் வேலு நாச்சியார் வரலாறுவரை தமிழர் வரலாற்றின் பல்வேறு கூறுகள் புத்தாக்க முறையில் சிறார்களால் படைக்கப்பட்டன.

‘வேரும் விழுதும்’ என்ற அங்கத்தில் சிலப்பதிகாரத்தின் ‘வழக்குரைக் காதை’ நிகழ்த்துகலைவழி காட்சிப்படுத்தப்பட்டது.

பண்டைய தமிழ் இலக்கியத்தின் பன்முகத்தன்மை

படைப்பாற்றல் பிரிவில், முதல் பரிசை வென்ற படைப்பு, ‘சிந்தை வாழும் தமிழும் என் ஈடுபாடும்’ என்னும் கருப்பொருளில் அமைந்திருந்தது.

அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி, ‘வேள்பாரி’ என்ற தலைப்பில் வேள்பாரி பற்றி கபிலர் எழுதிய சில புறநானூற்றுப் பாடல்களைத் தம்முடைய தலைமையுரையில் விரிவாக விளக்கினார்.

நாடாளுமன்ற முன்னாள் நியமன  உறுப்பினர் இரா. தினகரன் (வலக்கோடி) உள்ளிட்ட பேச்சாளர்கள் நிகழ்ச்சியில் உரையாற்றித் தமிழ் சார்ந்த தகவல்களைப் பகிர்ந்தனர்.
நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் இரா. தினகரன் (வலக்கோடி) உள்ளிட்ட பேச்சாளர்கள் நிகழ்ச்சியில் உரையாற்றித் தமிழ் சார்ந்த தகவல்களைப் பகிர்ந்தனர். - படம்: வாழ்வியல் இலக்கியப் பொழில்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விரிவுரையாளர் முனைவர் த. சுந்தரராஜ் ‘ஈர நல் மொழி’ என்ற தலைப்பில் வாழ்த்துரை வழங்கினார்.

இலக்கியப் படைப்பாற்றல்

மலேசியாவிலிருந்து வந்திருந்த மலாயாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆ. செல்லபெருமாள் ‘வேம்பின் பைங்காயென் தோழி தரினே’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அமைப்பின் பொருளாளர் மஹ்ஜபீன் ‘சிந்தையள்ளும் சீறா’ என்ற தலைப்பில் உமறுப்புலவர் எழுதிய சீறாப்புராணத்தில் வரும் சில பாடல்களோடு சிற்றுரையாற்றினார்.

நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன், ‘ஐந்திணை’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இலக்கியப் போட்டி நடுவர்களுக்கும் பல்சுவை அங்கங்களில் கலந்துகொண்டவர்களுக்கும் நினைவுப்பரிசுகளைச் சிறப்பு விருந்தினர் வழங்கினார். பார்வையாளர்களுக்கு நேரடித் திரை விளையாட்டு (Kahoot) போட்டியும் நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்