இசை, நடனம், குதூகலம் நிறைந்த மூன்று மணி நேரக் கொண்டாட்டத்தில் 3,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.
கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தில் நடைபெற்ற ‘சங்கம்’ என்ற அந்நிகழ்ச்சிக்கு, இந்திய நிர்வாகக் கல்விக்கழகங்களின் (ஐஐஎம்) முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) ஏற்பாடு செய்திருந்தது.
சங்கத்தின் ‘இன்ஸ்பையர்’ மன்றம் நடத்திய அந்த நிகழ்ச்சி சிங்கப்பூரின் முன்னேற்றத்தில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து, அவர்களுக்கு திருப்பித் தரும் வகையில் அமைந்தது.
அதில் மனிதவள மற்றும் கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸும் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பாக் அம்புலேயும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
‘‘முதல் முறையாக நாங்கள் ‘சங்கம்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்,’’ என்று ‘ஐஐஎம்’ லக்னோ சிங்கப்பூர் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் சந்தீப் திங்ரா கூறினார்.
“வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் விடுமுறை நாளை மகிழ்ச்சியாகக் கழிக்க ஒரு வாய்ப்பை வழங்க விரும்பினோம். அதோடு, சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளையும் ஒரே நேரத்தில் கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டோம்,” என்று திரு சந்தீப் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக, ‘ஐஐஎம்’ முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), ரெடிங்டன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து வழங்கவுள்ள புதிய கூட்டு முயற்சி பற்றி அறிவிக்கப்பட்டது. வெளிநாட்டு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் அந்த முயற்சியில், இரண்டு முக்கியத் திட்டங்கள் அடங்கியுள்ளன.
முதலாவது, திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம். அதன் மூலம் இந்தியாவில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற உதவியளிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது, கல்வி உதவித் திட்டம். அதன் மூலம் வெளிநாட்டு ஊழியர்களின் குழந்தைகளின் கல்விக்கு நிதி ஆதரவு வழங்கப்படும்.
ரெடிங்டன் அறக்கட்டளையுடன் கூடிய பங்காளித்துவம் அதிகாரபூர்வமாக செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் மேற்குறிப்பிட்ட இரண்டு திட்டங்களும் அடுத்த இரண்டு மாதங்களில் தொடங்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
“பெரும்பாலும் திரைக்குப் பின்னால் மறைந்து பணிபுரியும் நமது வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரைக் கட்டியெழுப்ப பெரும் பங்கு வகித்துள்ளனர். கடின உழைப்புடன் மட்டுமல்ல, தைரியத்தாலும், கருணையாலும், கனிவான செயல்களாலும் அவர்கள் இந்த நாட்டை வளப்படுத்தியுள்ளனர்.
“இந்நிகழ்ச்சியின் மூலம், அவர்களும் இந்தச் சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதை உணர்வார்கள் என்று நம்புகிறோம்,” என்று திரு சந்தீப் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் உள்ளூர் நடனக் குழுக்களும் இசைக்கலைஞர்களும் மேடையை அலங்கரித்தனர். ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் சுவாசப் பயிற்சிகளிலும் உடல் அசைவுப் பயிற்சிகளிலும் பங்கேற்பாளர்கள் ஆர்வமாக ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக, பிரபல பின்னணிப் பாடகர் கார்த்திக்கின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது பாடல்களைக் கேட்டு ரசித்து, மனமகிழ்ந்து கரகோஷம் எழுப்பிய பார்வையாளர்களின் உற்சாகம் மண்டபத்தை நிரப்பியது.
‘ஐஐஎம்’ முன்னாள் மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 தொண்டூழியர்கள் நிகழ்ச்சியை வழிநடத்த உதவினர்.
பங்கேற்ற அனைவருக்கும் மளிகைப் பொருள்களும் அத்தியாவசியப் பொருள்களும் அடங்கிய பரிசுப் பைகள் வழங்கப்பட்டன.
சங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒன்றுதான் ‘சங்கம்’ என்று கூறிய நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், சிங்கப்பூரிலுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவாக இன்னும் பல திட்டங்கள் வரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.