இந்தியாவில் தொடங்கப்பட்டு தற்போது உலக அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘பிளான்ட்4மதர்’ இயக்கத்தின் ஒரு பகுதியாகவும், சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசதந்திர உறவின் 60 ஆண்டைக் குறிக்கும் விதமாகவும் அமைந்த மரம் நடுவிழா பூமலையில் நடைபெற்றது.
பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தேசியப் பூங்காக் கழகத் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஹுவாங் யு நிங், சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஷில்பாக் அம்புலே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேசியப் பூங்காக் கழகம் இணைந்து நடத்திய இவ்விழாவில் இந்தியா, சிங்கப்பூர் இரு நாடுகளிலும் வளரும் தும்பிலி மரக்கன்று (Diospyros malabarica) நடப்பட்டது. பெரும்பாலும் ஆற்றங்கரைகள், ஓடைகள் அருகேயுள்ள மழைக்காடுகளில் காணப்படும் இவை, கரும்பட்டைகளுடன், உண்ணக்கூடிய பழத்தை அளிக்கிறது.
கடந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு (2024 ஜூன் 5) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கிய இப்பசுமைத் திட்டம், 2020 முதல் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் மரங்கள் நடும் சிங்கப்பூரின் பசுமை இயக்கத்துடன் ஒத்துப்போவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இயற்கையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டியதுடன், இரு நாடுகளின் பசுமைத் திட்டமும் இயற்கையைப் பாதுகாக்கும் ஒரே நோக்கம் கொண்டுள்ளதாகவும் டாக்டர் ஹுவாங்கும் திரு அம்புலேவும் தெரிவித்தனர்.
முன்னதாக, இதன் தொடர்பில் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் 2024 ஆகஸ்ட் 17ஆம் தேதியும் என்பிஎஸ் அனைத்துலகப் பள்ளி மாணவர்கள், தூதரக வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி செப்டம்பர் 17ஆம் தேதியும் நடைபெற்றன.

