வானில் வண்ணஜாலம் நிகழ்த்தக் காத்திருக்கும் இந்திய விமானப் படையின் ‘சாரங்க்’ ஹெலிகாப்டர் குழு

சிங்கப்பூர் விமானக் கண்காட்சி 2026

வானில் வண்ணஜாலம் நிகழ்த்தக் காத்திருக்கும் இந்திய விமானப் படையின் ‘சாரங்க்’ ஹெலிகாப்டர் குழு

2 mins read
780b531c-db28-43c8-88ac-6d364d053e51
சாங்கிக் கண்காட்சி மையத்தில் பிப்ரவரி 3 முதல் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ள விமானக் கண்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் வந்துள்ளது இந்திய விமானப் படையின் ‘சாரங்க்’ ஹெலிகாப்டர் குழு. - படம்: சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் - ஃபேஸ்புக்
multi-img1 of 2

இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் பங்கேற்று, வானில் சாகசம் நிகழ்த்திப் பொதுமக்களின் கண்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கிறது இந்திய விமானப் படையின் ‘சாரங்க்’ ஹெலிகாப்டர் குழு.

சாங்கிக் கண்காட்சி மையத்தில் பிப்ரவரி 3 முதல் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சிங்கப்பூர் வந்துள்ள ‘சாரங்க்’ ஹெலிகாப்டர் குழு, 2024ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூரில் வான்சாகசத்தில் ஈடுபடவுள்ளது.

வடமொழியில் ‘சாரங்க்’ என்றால் மயில் என்று பொருள். இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் இலகுரக ஹெலிகாப்டர்களின் துல்லியத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்தும் அடையாளமாகத் திகழும் இந்திய விமானப்படையின் ‘சாரங்க்‘, உலக அளவிலான நான்கு ராணுவ ஹெலிகாப்டர் சாகசக் குழுவில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் உலகம் முழுவதிலுமிருந்து பங்கேற்கவுள்ள ஆகச்சிறந்த ஆறு முன்னணிக் கண்காட்சிக் குழுக்களில் ‘சாரங்க்’ குழுவும் ஒன்று.

விமானங்களின் போர்த்திறன், விமானிகளின் இயக்கும் திறன், பல வண்ணங்களில் புகையை வெளியிட்டவாறே வானில் வெவ்வேறு வடிவங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு சாகசங்களைச் சிங்கப்பூர்ப் பார்வையாளர்களுக்காக நிகழ்த்த ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது ‘சாரங்க் குழு’.

இதற்கிடையே சிங்கப்பூர் வந்தடைந்துள்ள ‘சாரங்க்’ குழுவினர், “சிங்கப்பூர்! நாங்கள் வந்துவிட்டோம்! ஆகாயத்தை நோக்கிட ஆயத்தமாகுங்கள். இது வியத்தகு  அற்புதமாக இருக்கப்போகிறது,” என்று தங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

2004ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய வான்வெளிக் கண்காட்சியில் அனைத்துலக அளவில் அறிமுகம் கண்ட ‘சாரங்க்’ குழு உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான இடங்களில் 1,200க்கும் மேற்பட்ட சாகச நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. 

மெய்சிலிர்க்க வைக்கும் சாகசக் காட்சிகள் மட்டுமல்லாது, இடர்கள் நிகழும்போது மக்களின் துயர் களைய உயிர்காக்கும் மீட்புப் பணியிலும் ‘சாரங்க்’ விமானிகள் ஈடுபடுகின்றனர்.

சிங்கப்பூரில் இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சியில் ஏறத்தாழ 50 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மேலும், கண்காட்சியில் புதிய அங்கமாக  விண்வெளி உச்சநிலை மாநாடும் இணைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

விமானக் கண்காட்சியின் முதல் நான்கு நாள்களில் துறை சார்ந்த வருகையாளர்களும், கடைசி இரண்டு நாள்களில் பொதுமக்களும் அனுமதிக்கப்படுவர்.

குறிப்புச் சொற்கள்