இளையர்கள் விரும்பும் வண்ணச் சேலைகள்

9 mins read
08e95b9e-d780-4187-9592-dfa34978d454
இளையர்களின் மனங்கவர்ந்த பேஸ்டல் நிற சேலைகள். - படம்: வினிஷா ரோகிணி

பெண்களுக்குச் சேலைகள் மேலுள்ள காதல் அலாதியானது. காலத்திற்கேற்ப பல்வேறு ஆடைகள் புழக்கத்திற்கு வந்து மறைந்திருந்தாலும் அவர்களுக்குச் சேலை மீதுள்ள ஆர்வமும் மோகமும் குறைவதே இல்லை.

குறிப்பாக தீபாவளி, பொங்கல், கோவில் விழாக்கள், திருமணங்கள் போன்றவற்றுக்குப் பெண்களின் தேர்வு அழகிய சேலைகள்தான் என்றால் அது மிகையல்ல. பாரம்பரியமான காஞ்சிப் பட்டுச் சேலை, தொடர்ந்து அனைத்து வயதினரிடமும் பிரபலமாக இருந்துவருகிறது.

எனினும், அவ்வப்போது இளையர்களின் தேர்வுகளுக்கேற்ப புதுப்புது வகைச் சேலைகளும் வந்திறங்கிய வண்ணம் உள்ளன.

இந்த தீபாவளிக்கு இளையர்களின் சேலைத் தெரிவுகள் மாறுபட்டதாகவும் அழகியலோடு வசதிக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அமைந்துள்ளதை அறியமுடிகிறது.

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் களைகட்டத் தொடங்கியுள்ளது தீபாவளிச் சேலை வியாபாரம்.
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் களைகட்டத் தொடங்கியுள்ளது தீபாவளிச் சேலை வியாபாரம். - படம்: பே கார்த்திகேயன்

புதுமையில் பழமை

தீபாவளிக்கு இளையர் விரும்பும் வெளிர் வண்ணச் சேலைகள்.
தீபாவளிக்கு இளையர் விரும்பும் வெளிர் வண்ணச் சேலைகள். - படம்: வினிஷா ரோகிணி

சிங்கப்பூர் இளையர்கள் சேலைகளில் பாரம்பரியக் கூறுகள் அடங்கியிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகச் சொன்னார் லிட்டில் இந்தியாவிலுள்ள ஜுவல் பேலஸ் கடை ஊழியர் குமார்.

அதேபோல் கனமான சேலைகளைக் காட்டிலும் அதிக எடையில்லாத, நேர்த்தியான சேலைகளை அவர்கள் விரும்புவதாக அவர் சொன்னார்.

‘சாஃப்ட் சில்க்’ எனும் மென்மையான சேலைகள், பனாரஸ் சேலைகள், ‘டஸ்ஸர்’ சேலைகள் போன்றவை இளையர் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

குறிப்பாக, ‘மால் மால் காட்டன்’ எனப்படும் தோலுக்கு உறுத்தல் இல்லாத வகைச் சேலைகளை சிங்கப்பூரில் அதிகம் வாங்குகிறார்கள் என்று சொன்னார் ‘ஸ்டைல் எக்ஸ்பிரஸ்’ கடை உரிமையாளர் மணிகண்டன்.

நவீன பாணிச் சேலைகளில் பாரம்பரிய வடிவங்கள்.
நவீன பாணிச் சேலைகளில் பாரம்பரிய வடிவங்கள். - படம்: வினிஷா ரோகிணி

புதிய வகைச் சேலைகளிலும் பாரம்பரிய வடிவங்கள் (Motifs) அமைந்தவற்றை விரும்பி வாங்குவதாகவும் அவர் சொன்னார்.

எடுத்துக்காட்டாக, வன சிங்கம் எனும் பழமைவாய்ந்த சரிகை வடிவம், வைர ஊசி எனப்படும் சேலை முழுவதும் மெல்லிய சரிகைக் கோடுகள் கொண்டவை பிரபலம் அடைந்துள்ளதாக அவர் கூறினார்.

கடந்த ஆண்டு வரை மெல்லிய சரிகை கொண்ட சேலைகள் அதிகம் விற்கப்பட்டதாகவும் இந்த ஆண்டு பெரிய சரிகை கொண்ட சேலைகள் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் சொன்னார் மணிகண்டன். நடுவில் சிறு இடைவெளியுடன் இரு சிறிய சரிகைகள் கொண்ட ‘இரட்டைப் பட்டை’ புடவைகள் அதிகம் விரும்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

பழைய வடிவங்களாகக் கருதப்பட்ட யானை, மாங்காய் போன்ற வடிவங்கள் கொண்ட சரிகையும் மீண்டும் பிரபலமடைந்து வருகிறது.

சிறு ‘பார்டர்களுடன்’ கூடிய ஜார்ஜெட் சேலை.
சிறு ‘பார்டர்களுடன்’ கூடிய ஜார்ஜெட் சேலை. - படம்: வினிஷா ரோகிணி

உடல் பகுதியிலும் சரிகையிலும் ‘பல்லாக்கு’ வடிவம் கொண்ட பட்டு, சில்க் காட்டன் வகைச் சேலைகள் இளையர் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது என்றார் வீட்டிலிருந்தே சேலை வணிகம் மேற்கொள்ளும் வினிஷா ரோகிணி, 20.

பழைய பாணியிலான குஞ்சம் வைத்த சேலைகள் அதிகம் விரும்பப்படாவிட்டாலும், அதன் மறுவடிவமான ‘பாம் பாம்ஸ்’ எனப்படும் முந்தானை நுனிகளில் கோக்கப்படும் சிறு பருத்தி நூல் பந்துகளை இளையர்கள் விரும்புகின்றனர் என்றார் அவர்.

‘பளிச்’சிடும் சேலைகளைவிட கண்ணை உறுத்தாத சேலைகளை இளையர்கள் விரும்புவதாகக் கூறினார் ‘ரோபோரியா’ (Rphoria) எனும் பெயரில் இணையம் வாயிலாகப் புடவை வணிகம் செய்யும் தனீஷா, 39.

ஜுவல் பேலஸ் கடையில் விற்பனைக்கு உள்ள, ‘பிளைன்’ சேலை, வண்ண ரவிக்கைக் கலவைகள்.
ஜுவல் பேலஸ் கடையில் விற்பனைக்கு உள்ள, ‘பிளைன்’ சேலை, வண்ண ரவிக்கைக் கலவைகள். - படம்: பே கார்த்திகேயன்

பாரம்பரியப் பட்டு வகைகளைக் காட்டிலும் கோட்டா பட்டுச் சேலைகள், பாந்தினி சேலைகள், ஆர்கன்சா உள்ளிட்டவை அதிகம் விரும்பப்படுவதாக அவர் கூறினார். தவிர, நீடித்த நிலைத்தன்மை குறித்த ஆர்வமும் மரபு குறித்த பார்வையும் மேம்பட்டுவரும் நிலையில் கைத்தறிப் புடவைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும் போக்கும் கவனிக்கத்தக்கது என்றார் அவர்.

இக்கருத்தை ஒப்புக்கொண்ட குமார், கோபுர வடிவம், நூல் வேலைப்பாடுகள் உள்ளிட்ட கைவினை வேலைப்பாடுகள் கொண்ட சேலைகள் பெரிதும் விரும்பப்படுகின்றன என்றார்.

தங்க நூலிழையில் முப்பரிமாண வடிவங்கள் பொருந்திய சேலைகள் விரும்பப்படுவதாகக் கூறினார் வினிஷா.

ஜுவல் பேலஸ் கடையில் காணப்படும் பட்டு, சில்க் காட்டன், காட்டன் சேலைகள்.
ஜுவல் பேலஸ் கடையில் காணப்படும் பட்டு, சில்க் காட்டன், காட்டன் சேலைகள். - படம்: பே கார்த்திகேயன்

கட்டம் போட்ட சேலைகளை நடுத்தர வயதினரும் இளம்பெண்களும் விரும்பி வாங்கத் தொடங்கியுள்ளது வியப்பளிப்பதாகச் சொன்னார் குமார். கருநீலம், பச்சை உள்ளிட்ட அடர் நிறங்களிலும் வெளிர் மஞ்சள் போன்ற நிறங்களிலும் உள்ள பாரம்பரியமான கட்டம்போட்ட சேலைகள் மீண்டும் பிரபலமாவதாகத் தெரிகிறது.

‘பிரின்டட்’ சேலைகளும் விரும்பப்படுவதாக வணிகர்கள் கூறுகின்றனர். பாரம்பரிய வடிவங்களை நவீன பாணியில் கொண்டுவரும் எளிய முறை இது. ‘கலம்காரி’ தொடங்கி பல்வேறு நுணுக்கமான வடிவங்களைச் சேலைகளில் ‘பிளாக் பிரிண்ட்’ முறையில் அச்சிடும் இம்முறையை இளையர்கள் விரும்பும் வண்ணத்திலும் துணியிலும் செய்யலாம் என்பது இதன் தனிச்சிறப்பு.

‘லினன்’ சேலைகள், ‘பிராசோ’ சேலைகளும் இளைஞர்களின் தெரிவாக உள்ளது. சிலர் ‘டிஷ்யூ’ சேலைகள், ‘மஸ்லின் சில்க்’, ‘ஷிம்மர் சில்க்’ வகைச் சேலைகளை விரும்புகின்றனர்.

அனைத்து வயதினரிடமும் தொடர்ந்து வரவேற்பைப் பெறுவது ‘ஷிபான்’ சேலைகள்தான் என்றார் தேக்கா பகுதி சேலைக் கடை ஊழியர் முனாஃப். விழாக்காலத்தில் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில், பல்வேறு வடிவங்கள், கற்கள், மணிகள் பதித்த சேலைகளை அணிய விரும்புவோர்க்கு இது எக்காலத்துக்கும் ஏற்ற விருப்பத் தெரிவாக அமையும் என்றார் அவர்.

வண்ணங்கள்

தீபாவளியை முன்னிட்டு வந்து குவிந்துள்ள வண்ணச் சேலைகள்.
தீபாவளியை முன்னிட்டு வந்து குவிந்துள்ள வண்ணச் சேலைகள். - படம்: மணிகண்டன்

அதிநவீன தோற்றத்தை அளிக்கும் ‘மெட்டாலிக்’ வண்ணங்கள் இளைஞர்களின் தேர்வாக உள்ளன. பட்டுப் புடவைகளிலும் ‘ஜார்ஜெட்’, ‘லினன்’ என அனைத்து வகைச் சேலைகளிலும் இத்தகைய வண்ணங்களைப் பலரும் விரும்புகின்றனர்.

தங்க நிற, செம்பு நிற வண்ணங்கள் இளைஞர்களின் விழாக்காலத் தேர்வு. அடர் நிறங்களில் வெள்ளி, சாம்பல் நிறம் கலந்தாற்போல் உள்ள சேலைகளும் விரும்பப்படுகின்றன.

கடந்த ஆண்டு தொடங்கி தற்போது வரை வரவேற்பைப் பெற்றுவருவது ‘பேஸ்டல்’ எனப்படும் மாறுபட்ட, அழகிய வெளிர் நிறங்கள் என்று சேலை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

‘நியான்’ பச்சை, ‘காட்டன் கேண்டி’ எனப்படும் பஞ்சு மிட்டாய் வண்ணம், ‘யுனிகார்ன்’, ‘பேடில் பாப்’ உள்ளிட்ட கலவை வண்ணங்கள் இளையர்களை ஈர்த்துள்ளதாகத் தெரிகிறது.

‘கோரல்’ எனப்படும் பவளப் பச்சை (நீலம் கலந்த பச்சை), ‘டர்காய்ஸ்’ எனப்படும் ஒருவகை நீல நிறம், ஊதா நிறம், வெந்தய நிறம், ஆரஞ்சு நிறத்தின் வெளிர் வகைகள் இந்த ஆண்டு பலரும் சேலைகளில் விரும்பி வாங்கும் வண்ணங்கள் என்றார் தனீஷா.

பட்டுச் சேலைகளில் சில அடர் நிறங்களும், பச்சை-இளஞ்சிவப்புக் கலவையும் இளையர்களின் தெரிவாக உள்ளன.

தவிர முழுச் சேலையும் ஒரே நிறத்திலோ ஒரே நிறத்தின் இரு வகைகளைக் கொண்டதாகவோ அமைந்திருப்பது பலரது விருப்பத் தேர்வாக அமைந்துள்ளது.

‘ஜியாமெட்ரிக்’ எனப்படும் வண்ண வடிவங்கள் கொண்ட சேலைகளையும் பலர் விரும்புகின்றனர்.

நேர்த்தியும் வசதியும்

“சேலை அணிய இளையர்கள் விரும்பினாலும் அது வசதியாகவும் விழாக்காலக் கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவிக்காமலும் இருக்கவேண்டும் என விரும்புகிறார்கள்,” என்றார் சிலிகி ரோட்டில் ‘ஜிந்தர்’ எனும் சேலைக் கடை நடத்திவரும் சோனியா.

தொடக்கத்தில் சேலை கட்டும் அழகுக்கலை நிபுணரிடம் சென்று அணிந்து வரும் போக்கு இருந்தது. சென்ற ஆண்டு வரை முன்கூட்டி மடித்த சேலைகள் பிரபலமாக இருந்தன.

“தற்போது தைக்கப்பட்ட சேலைகள் பிரபலமாக உள்ளன,” என்றார் ‘மிரிதுன்ஸ்’ எனும் பெயரில் வீட்டிலிருந்து சேலை வியாபாரம் செய்துவரும் சிந்துமதி, 34.

தங்களுக்குப் பிடித்த சேலைகளைத் தேர்வு செய்து அதனை விருப்பத்திற்கேற்ப தைத்து வாங்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

‘ரஃபிள்’ பாணியில் தைக்கப்பட்ட சேலைகள் பிரபலமாக உள்ளன என்றார் சோனியா.

இவை தவிர ‘இண்டோ-வெஸ்டர்ன்’ எனப்படும் பலவித மேலாடைகள் அணிந்து சேலை கட்டுவது, கால் சட்டை பாணியில் ஒரே ஆடைபோல தைக்கப்பட்ட சேலை அணிவது சிலரது விருப்பமாக உள்ளது.

சேலை வாங்கும் முறை

சேலையின் வண்ணம், வடிவங்கள், துணி ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுவது போலவே, சேலை வாங்கும் முறையிலும் மாற்றம் இருப்பதாகக் கூறினார் இணையவழி வணிகரான வினிஷா ரோகிணி.

கடைகளுக்கு இணையாக, இணைய வழியிலும் சமூக ஊடகங்களின்வழி வீட்டிலிருந்து வணிகம் செய்வோரிடமும் சேலை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

தொடக்கத்தில் ஃபேஸ்புக்வழி விற்று வந்த சிந்துமதி தற்போது ‘இன்ஸ்டகிராம்’ பக்கம் தொடங்கி மக்களைச் சென்றடைகிறார். அவ்வப்போது வரும் புதிய வகைச் சேலைகள் குறித்த குறுங்காணொளிகள் வெளியிடுவது, படங்களைப் பதிவேற்றி அதன் சிறப்பம்சங்களை விளக்குவது உள்ளிட்டவை இவரது விற்பனை பாணி.

‘டிக் டாக் - லைவ்’ மூலம் இளையர்கள் சேலை வாங்குவதாகக் கூறினார் வினிஷா.

“இணையப் பக்கங்களில் சில படங்களை மட்டுமே பார்க்க முடியும். ‘லைவ்வில்’ சேலையை விரித்துக் காட்டுவதும் அதன் நிறம், வடிவங்கள் குறித்து விளக்கிச் சொல்வதும் இளையர்களை ஈர்க்கிறது,” என்றார் அவர்.

“கடைக்குச் சென்று அதிக நேரம் செலவிட முடியாதவர்கள், ஓய்வு நேரத்தில் வீட்டிலிருந்தபடி பல்வேறு சேலைகளைப் பார்த்து, பிடித்தவற்றைத் தேர்வுசெய்ய வசதியாக இருப்பதால் இதனைத் தேர்ந்தெடுக்கின்றனர்,” என்றார் அவர்.

சேலை கட்டும் பல்வேறு முறைகள், 2 நிமிடச் சேலை உடுத்தும் போட்டி உள்ளிட்ட காணொளிகள் மூலம் சமூக ஊடகத்தில் தன்னைப் பின்தொடர்வோரை ஈர்ப்பது இவரது பாணி. காணொளி மூலம் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்குச் சேலையை அனுப்பி வைக்கும் சேவையையும் இவர் வழங்குகிறார்.

ஒருவருடன் தொடர்புகொண்டு சேலை வாங்குவது, விருப்பத்திற்கேற்ப வடிவமைப்பது, வெவ்வேறு விதங்களிலிருந்து தேர்வு செய்யும் வாய்ப்பு ஆகியவற்றால் கடைகளுக்கு இணையாக வீட்டிலிருந்து விற்பனை செய்வோரிடம் மக்கள் வாங்குகின்றனர் என்றார் வினிஷா.

கடைகளைவிட விலை சற்றே குறைவாக இருப்பதால் இவ்வாறான சிறு வணிகர்களிடம் வாங்குகின்றனர் என்பது சிந்துமதியின் கருத்து.

விழாக்காலம் என்றாலே குடும்பமாக வந்து பல சேலைகளைத் தொட்டுணர்ந்து, கலந்து பேசி வாங்கும் அனுபவம் அலாதியானது என்றார் ஜுவல் பேலஸ் கடை ஊழியர் குமார்.

சாதாரணமாக வாங்கும்போது இணையம்வழி வாங்கினாலும், தீபாவளிக்குக் கடைகளில் கூட்டம் அலைமோதுவது கண்கூடாகத் தெரியும் என்றார் அவர். அவர் சொன்னதைப் போன்றே இம்மாதம் முதல் வாரத்திலேயே தீபாவளிக்குச் சேலை வாங்குவோர் கூட்டத்தைத் தேக்கா பகுதியில் காணமுடிந்தது.

கடந்த 25 ஆண்டுகளாகச் சேலை, ஆடைகள் விற்கும் கடை நடத்திவரும் சோனியா, இளையர்களின் விருப்பத்துக்கு இணங்க கடந்த சில ஆண்டுகளாக ‘ஜிந்தர்’ எனும் இணையப்பக்கம் வாயிலாகவும் விற்பனை செய்துவருகிறார்.

சிராங்கூன் ரோட்டில் கடை நடத்தி வரும் மணிகண்டன் ‘ஸ்டைல் எக்ஸ்பிரஸ்’ எனும் ‘இன்ஸ்டகிராம்’ பக்கம் வழியாக இளையர்களைச் சென்றடைகிறார். ரசனையைத் தூண்டும் பாடல்களுடன் விதவிதமான சேலை கட்டிய பொம்மைக் காணொளிகளைப் பதிவேற்றம் செய்வது இவரது பாணி.

இளம்பெண்கள் கருத்து

“தீபாவளிக்குச் சேலைதான் என் தேர்வு. சேலை பண்டிகைக்கால குதூகலத்தை அளிப்பதாக உணர்கிறேன்,” என்றார் சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக்கழக மாணவி லாவண்யா பிரேம் ஆனந்த், 22.

ஆர்கன்சா சேலைகள், குறிப்பாக ‘சாஃப்ட் பிங்க்ஸ், மியூட் ப்ளூஸ், பெய்ஜ்’ உள்ளிட்ட வண்ணங்கள் அவருக்கு விருப்பம். எம்பிராய்டரி, மலர் வடிவங்கள் தன்னை ஈர்ப்பதாகவும் $50 முதல் $100 வரையுள்ள சேலைகளைத் தேர்ந்தெடுப்பதாகவும் அவர் சொன்னார்.

நமது வளமான, கலாசார வரலாற்றுக் கூறுகளின் அடையாளம் சேலைகள் என்றார் 22 வயது சம்ஹித்தா ஷாம்பவி. தனது பாட்டியைப் பார்த்து வளர்ந்ததால் ஒன்பது வயது முதலே எளிதாகச் சேலைகள் உடுத்தத் தொடங்கியதாகக் கூறுகிறார் இவர்.

நிறம், துணி வகைகளைக் காட்டிலும் மடிசார், வட இந்திய பாணி, ஆந்திர பாணி போன்ற முறைகளில் உடுத்திப் பார்ப்பது தனக்கு உற்சாகமளிக்கும் என்றார் இவர்.

‘பிளைன் சாடின்’ சேலையுடுத்தி நேரெதிர் வண்ண ரவிக்கை, நேர்த்தியான முத்து ஆபரணங்கள் அணிந்து நடந்தால் ஓர் இளவரசியைப் போல் உணர்வேன்,” என்றார் சம்ஹித்தா. பொதுவாக இணையவழியில் 100 வெள்ளிக்குள் சேலை வாங்குவதாகக் கூறினார் இவர்.

சரும நிறத்துக்கேற்ற, நுணுக்கமான வடிவமைப்புகள் கொண்ட மெல்லிய சேலைகள் தனது விருப்பம் என்றார் கணினி அறிவியல் துறையில் பயிலும் வர்ஷா வித்யா ஷங்கர், 22.

சேலைகள் தன்னை உள்ளும் புறமும் அழகாக உணர வைப்பதாகச் சொல்லும் இவர் உடுத்துவதற்கு எளிதாக இருக்கும் சேலைகளை இந்த ஆண்டு வாங்கவிருப்பதாகக் கூறினார்.

விலை

வீட்டிலிருந்து விற்கப்படும் சாதாரண சேலைகள் $40 முதல் $80 வரையிலும் காஞ்சிப் பட்டுச் சேலைகள் $180 முதல் $800 வரையிலும் கிடைக்கின்றன. இவற்றில் $300 முதல் $500 வரை விலையுள்ள சேலைகள் விரும்பி வாங்கப்படுகின்றன. தைக்கப்பட்ட சேலைகள் $250 முதல் கிடைக்கின்றன.

சேலை அலங்காரம்

சேலை மட்டுமின்றி அதற்கேற்ற ரவிக்கை, அணிகலன்களோடு அணிவது அலங்காரத்தை முழுமையடையச் செய்கிறது.

பட்டுப் புடவைகளுக்கு, அதேபோன்ற துணியினாலான ‘ஜர்தோசி’ வேலைப்பாடுகள் கொண்ட ரவிக்கை, ரா சில்க், லினன், டஸ்ஸர் பாணிச் சேலைகளுக்கும், உடலெங்கும் ஒரே நிறம் கொண்ட சேலைகளுக்கும் ‘கான்டராஸ்ட்’ எனப்படும் எதிர் நிற ரவிக்கையும் பிரபலம்.

சில குறிப்பிட்ட வகைச் சேலைகளுக்கு தங்க நிற வேலைப்பாடுகளுடன் கூடிய ‘ஹை நெக்’, ‘பீட்டர் பான்’ வகையிலான கழுத்தை ஒட்டிய ரவிக்கை அணிவதும் பிரபலம்.

பொதுவாகச் சேலைகளுக்குக் கண்ணை உறுத்தாத கழுத்தை ஒட்டிய கல் வைத்த நகைகள் அணிவது இளையர்களின் விருப்பமாக உள்ளது.

அதிக வேலைப்பாடுள்ள சேலைகளுக்கு நவீன பாணி இடையணி (Belt) (ஒட்டியாணம் அல்ல) அணிவதும் கடந்த சில ஆண்டுகளாக வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொதுவாகச் சேலையின் நிறம், நகைகள் போன்றவை திரை நட்சத்திரங்கள், சமூக ஊடகப் பிரபலங்களின் உடைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாகக் கூறுகின்றனர் விற்பனையாளர்கள்.

குறிப்புச் சொற்கள்