உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவு 2029ஆம் ஆண்டில் தனது முதல் செயற்கைக்கோளைப் பாய்ச்சவிருக்கிறது.
பொதுமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்த உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவு, விண்வெளித் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறது. அதில் இந்நடவடிக்கை அங்கம் வகிக்கிறது.
அந்த செயற்கைக்கோளுக்கு எக்ஸ்பிளோரர் (Xplorer) என்று பெயரிடப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சு சீருடைப் பிரிவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு (எச்டிஎக்ஸ்) அதனை உருவாக்கும் என்று தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) தெரிவித்தார். அந்த செயற்கைக்கோள் அபாயகரமான வாயுக்களை அடையாளம் காணும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எக்ஸ்பிளோரரின் எடை கிட்டத்தட்ட 100 கிலோகிராமாக இருக்கும். அது, நிலநடுக்கோட்டுப் பகுதிக்கு அருகே பாய்ச்சப்படும். அமோனியா போன்ற அபாயகரமான வாயுக்களை அடையாளம் காணும் ஆற்றலை அது கொண்டிருக்கும் என எச்டிஎக்ஸ் தெரிவித்தது.
எச்டிஎக்ஸ், எஸ்டி எஞ்சினியரிங் நிறுவனத்துடன் சேர்ந்து செயற்கைக்கோளைப் பாய்ச்சும்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குக் கைகொடுக்க முயற்சி
எக்ஸ்பிளோரர், நெருக்கடி ஏதேனும் ஏற்பட்டால் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு மேலும் விரைவில் எச்சரிக்கை விடுக்கும்; அந்தந்தச் சூழ்நிலைக்கேற்ப செயல்படுவதற்கான படையின் ஆற்றலை மேம்படுத்தும்; அதன்மூலம் துரிதமாக முடிவெடுக்கவும் விரைவில் செயல்படவும் முடியும் என்று உள்துறை அமைச்சருமான திரு சண்முகம் விளக்கினார்
“செயற்கை நுண்ணறிவையும் தாண்டி மற்ற அம்சங்களிலும் முன்கூட்டியே கவனம் செலுத்தவேண்டும். சில தொழில்நுட்ப அம்சங்கள் வருங்காலத்தில் மேலும் உத்திபூர்வமாகச் செயல்பட வகைசெய்யும். விண்வெளித் துறை அதற்குக் கைகொடுக்கும் துறையாகும்,” என்று இவ்வாண்டின் மிலிபோல் டெக்எக்ஸ் மாநாட்டின் (Milipol TechX Summit) தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது திரு சண்முகம் கூறினார்.
அந்த மாநாடு, மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்த அறிவியல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மாநாடு கவனம் செலுத்தும்.
தொடர்புடைய செய்திகள்
75 நாடுகளைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி அரசாங்க அதிகாரிகள், தொழில்துறைத் தலைவர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த எவ்வாறு விண்வெளித் தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்தலாம் என்பதை ஆராய எச்டிஎக்ஸ், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தேசிய விண்வெளி அமைப்புடன் (என்எஸ்ஏஎஸ்) சேர்ந்து பணியாற்றி வருவதாகவும் திரு சண்முகம் தெரிவித்தார்.
தேசிய விண்வெளி அமைப்பு, ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது.

