சிங்கப்பூரில் வரும் மார்ச் 21ஆம் தேதி சனிக்கிழமை முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவார்கள் என்று சிங்கப்பூர் முஃப்தி நசிருதீன் முகம்மது நசிர் வியாழக்கிழமை (மார்ச் 19) அறிவித்துள்ளார்.
வியாழன் மாலை சூரியன் மறைந்தபோது, ஷவ்வால் மாதத்திற்கான பிறை சிங்கப்பூரில் வானத்தில் மிகத் தாழ்வான நிலையில் இருந்ததால், அதனைக் காண்பதற்கான வாய்ப்பு இல்லை என்று அவர் ஊடக அறிக்கையில் விளக்கினார்.
இதன் காரணமாக, வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் ரமலான் மாதத்தின் 30வது நாள் நிறைவுபெறும் என்றும், அதற்கு அடுத்த நாளான மார்ச் 21 சனிக்கிழமை ஹிஜ்ரி 1447ஆம் ஆண்டின் ஷவ்வால் மாதம் தொடங்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
ரமலான் மாதம் இன்னும் முடிவடையாத நிலையில், நற்செயல்களிலும் பிரார்த்தனைகளிலும் ஈடுபடுமாறு அவர் முஸ்லிம்களைக் கேட்டுக்கொண்டார்.
அனைத்து சிங்கப்பூர் முஸ்லிம்களுக்கும் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த முஃப்தி, நன்றியுணர்வுடன் ஷவ்வால் மாதத்தை வரவேற்கவும், ஒருவருக்கொருவர் உறவுகளையும் அன்பையும் வலுப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

