11 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துகொண்ட சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம்

11 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துகொண்ட சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம்

2 mins read
ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் ஒட்டுமொத்த விற்பனைத் துறைக்குக் கைகொடுக்கவும் முயற்சி
c52a2d10-32f6-4cd9-acf9-fb38826d4584
வர்த்தக, தொழில் மற்றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஆல்வின் டான். - கோப்புப் படம்: சாவ்பாவ்

சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் (எஸ்பிஎஃப்) 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தங்கள், ஒட்டுமொத்த வர்த்தகத் துறையின் ஊழியரணி உருமாற்றக் கட்டமைப்பை வலுப்படுத்த உதவும் என்று அது கூறியது.

ஒட்டுமொத்த வர்த்தகத்துக்கான வேலைத் திறன் ஒருங்கிணைப்புத் (ஜேஎஸ்ஐடி-டபிள்யூஎஸ்டி) திட்டத்தின்கீழ் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள், ஊழியர்களின் திறன்களில் இருக்கக்கூடிய குறைபாடுகளுக்குத் தீர்வுகாணவும் வர்த்தக வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும் என்று எஸ்பிஎஃப் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) கூறியது.

அடுத்த ஓராண்டுக் காலத்தில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கிட்டத்தட்ட 70 நிறுவனங்களுக்கும் ஏறத்தாழ 1,000 ஊழியர்களுக்கும் பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் விநியோகச் சங்கிலிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டு, தொழில்நுட்ப ரீதியாக விரைவான மாற்றங்கள் ஏற்பட்டுவரும் சூழலில், பயிற்சியளித்து உருமாற்றுவதிலும் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிசெய்வதிலும் சிங்கப்பூர் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கலாம் என்றும் அதுவே ஜேஎஸ்ஐடி-டபிள்யூஎஸ்டி திட்டத்தின் நோக்கம் என்றும் வர்த்தக, தொழில் மற்றும் தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் ஆல்வின் டான் குறிப்பிட்டார்.

ஜேஎஸ்ஐடி-டபிள்யூஎஸ்டி 952 நிறுவனங்களுக்கு ஆதரவளித்திருக்கிறது. அதோடு, 1,162 வேலைகள் தொடர்பிலான விவகாரங்களைக் கையாண்டதுடன் கிட்டத்தட்ட 650 ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்க அது உதவியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1,700க்கும் மேலான நிறுவங்களைத் தொடர்புகொண்டு 1,200 வேலை விவகாரங்களைக் கையாண்டு 1,600 ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவது அல்லது புதுப்பிப்பது ஜேஎஸ்ஐடி-டபிள்யூஎஸ்டியின் இலக்காகும்.

ஆட்சேர்ப்பு, பயிற்சி, தொழில்துறை ஆற்றல் ஆகிய மூன்று அம்சங்களில் எஸ்பிஎஃப் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கவனம் செலுத்தும்.

வேலைக்கு எடுப்பதைப் பொறுத்தவரை எஸ்பிஎஃப், தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி), வேலை நியமன, வேலைத்தகுதிக் கழகம் உள்ளிட்டவற்றுடன் பங்காளித்துவம் செய்துகொண்டுள்ளது. இதன்கீழ் தேவைப்படுவோருக்கு வேலை வாங்கித் தரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பயிற்சியளித்தலைப் பொறுத்தவரை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி போன்றவற்றுடன் எஸ்பிஎஃப் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதன்கீழ் மின்னிலக்கமயமாதல், வர்த்தக உருமாற்றம் உள்ளிட்டவற்றின் தொடர்பில் பயிற்சி வழங்குவதில் கவனம் செலுத்தப்படும்.

தொழில்துறை ஆற்றல் அம்சத்தைப் பொறுத்தவரை ஃபூட்எக்ஸர்விசஸ், எஸ்டி லாஜிஸ்டிக்ஸ் போன்றவை திறன் குறைபாடுகளைக் கண்டறிதல், வேலைகளை மறுவடிவமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான ஆற்றலை நிறுவனங்கள் வளர்த்துக்கொள்ளக் கைகொடுக்கும்.

குறிப்புச் சொற்கள்