மலேசியாவைச் சேர்ந்த ஒருவர், சிங்கப்பூரில் கடப்பிதழைத் தொலைத்துவிட்டு மெக்டோனல்ட் உணவகத்தில் தங்க வேண்டிய இக்கட்டனான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டார்.
அவருக்கு எஸ்பிஎஸ் ஊழியர் ஒருவர், கடப்பிதழைத் தேடிக் கண்டுபிடித்து உதவியுள்ளார்.
அதிகாலையில் அங் மோ கியோ பேருந்து நிலையத்திற்குச் சென்ற அவர், அங்கிருந்த மூத்த நிலைய மேற்பார்வை உதவியாளரான நித்தியானந்தன் பழனி (நாதன்) என்பவரிடம் கண்ணீர்விட்டு, கடப்பிதழைத் தொலைத்துவிட்டதாகக் கூறினார்.
“கடப்பிதழ் இல்லாமல் மலேசியாவுக்குத் திரும்ப முடியாது என்று கூறி அவர் என்னிடம் கதறி அழுதார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை,” என்று திரு நாதன் நினைவுகூர்ந்தார்.
கடப்பிதழைத் தவறவிட்ட ஒருவர் வாடிக்கையாளர் சேவை அலுவலகத்தை அணுகியதாகவும் பேருந்தில் அவர் கடப்பிதழை விட்டிருக்கலாம் என்றும் ஃபேஸ்புக்கில் திரு நாதன் பின்னர் பதிவிட்டிருந்தார்.
அவர், பல பேருந்து நிலையங்களுடனும் சிலேத்தார் பேருந்து பணிமனையுடனும் தொடர்புகொண்டு கடப்பிதழ் பற்றி விசாரித்தார்.
அப்போது பேருந்துச் சேவை எண் 24ல் கடப்பிதழ் ஒன்றைக் கண்டுபிடித்ததாக அதன் ஓட்டுநர் ஒருவர் கூறியிருந்தார். நாதன் நேரடியாகப் பணிமனைக்குச் சென்று கடப்பிதழை வாங்கி ஆடவரிடம் தகவல்களைச் சரிபார்த்த பிறகு ஒப்படைத்தார்.
“மேலும்,கடப்பிதழைத் திரும்பப்பெற்றதால் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்,” என்று திரு நாதன் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அந்த நபர் பல நாள்களுக்குப் பிறகு அழைத்து, தனிப்பட்ட முறையில் திரு நாதனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
திரு. எம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்ட மலேசிய நபர், பின்னர் நாதனைப் பாராட்ட எஸ்பிஎஸ் டிரான்சிட்டிற்கும் கடிதம் எழுதியுள்ளார்.

