சிங்கப்பூரில் 1,100க்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 223 பேரை காவல்துறை விசாரித்துவருகிறது.
அந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டோர் $6.58 மில்லியனுக்கு மேல் இழந்துள்ளனர்.
16க்கும் 80 வயதுக்கும் இடைப்பட்ட 147 ஆடவர்களும் 76 பெண்களும் மோசடிக்காரர்கள் அல்லது கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் என்று சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை கூறியது.
நவம்பர் 15 முதல் நவம்பர் 28 வரை மேற்கொள்ளப்பட்ட இரண்டு வாரச் சோதனை நடவடிக்கையில், அந்தச் சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.
அந்த மோசடிகள் மின் வர்த்தகம், வேலை, நண்பர் ஆள்மாறாட்டம், முதலீடு, இணையக் காதல், அரசாங்க அதிகாரி ஆள்மாறாட்டம் ஆகியவற்றுடன் தொடர்பானவை.
ஏமாற்றியது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது, உரிமமின்றி கட்டணச் சேவைகள் வழங்கியது ஆகியவற்றுக்கு, அந்தச் சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுவதாக காவல்துறை கூறியது.
இந்தக் குற்றங்களில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்டவை நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு பத்தாண்டுவரை சிறைத் தண்டனை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
இத்தகைய மோசடிகளுக்கு எதிராக கவனத்துடன் இருக்குமாறு காவல்துறை பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குகிறது. அதோடு, வங்கிக் கணக்குகளையோ கைப்பேசி எண்களையோ பயன்படுத்த மற்றவர்களிடமிருந்து கோரிக்கை வந்தால், அதை நிராகரிக்குமாறும் ஆலோசனை கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் மோசடிகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, பொதுமக்கள் www.scamshield.gov.sg எனும் இணையத்தளத்திற்குச் செல்லலாம் அல்லது ‘ஸ்கேம்ஷீல்டு’ உதவிச் சேவையை 1799 என்ற என்ணில் தொடர்புகொள்ளலாம்.
அத்தகைய குற்றங்களைப் பற்றி அறிந்தோர், 1800-225-0000 என்ற காவல்துறை தொடர்பு எண் அல்லது www.police.gov.sg/i-witness எனும் இணையத்தளம் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.

