இவ்வாண்டுக்கான தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டுக் குழு தொலைபேசி அழைப்புகள் மூலம் பொதுமக்களிடமிருந்து ஒருபோதும் ரொக்கமோ நன்கொடையோ கேட்காது எனத் தெரிவித்துள்ளது.
அத்தகையோரின் தனிப்பட்ட விவரங்களையும் ஏற்பாட்டுக் குழு பெற முயலாது என்று ஏற்பாட்டாளர்கள் ஜூன் 28ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர்.
என்டிபீப்ஸ் (NDPeeps) என்ற குழுவின் ஃபேஸ்புக் பக்கத்தில், தேசிய தின அணிவகுப்பின் ஏற்பாட்டுக் குழுவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபடுவோர் குறித்து அறிந்ததாக ஏற்பாட்டுக் குழு சொன்னது.
அத்தகைய மோசடிக்காரர்கள் பொதுமக்களை அழைத்து ரொக்கத்தையும் தனிப்பட்ட விவரங்களையும் தரும்படி கேட்பதாக அது குறிப்பிட்டது.
“தனிப்பட்ட விவரங்கள், வர்த்தக விவரங்கள், ரொக்கம் போன்றவற்றை அடையாளம் தெரியாத, நம்ப முடியாத நபர்களிடம் தரவேண்டாம்,” என்று குழு வெளியிட்ட ஆலோசனை கூறியது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தேசிய தின அணிவகுப்பின் ஏற்பாட்டுக் குழு பகிர்ந்த தொலைபேசி உரையாடல் பதிவில் ஏற்பாட்டுக் குழு பிரதிநிதியைப் போல பேசும் மோசடிக்காரர் ஒருவர் மற்றோர் ஆடவரிடம் $300லிருந்து $500 நன்கொடை தரும்படி கூறுவதைக் கேட்க முடிந்தது.
ஆடவர் கொடுக்கும் பணம் அவரது வருமான வரியிலிருந்து கழித்துக்கொள்ளப்படும் என்றும் மோசடிக்காரர் சொல்கிறார்.
ஆடவரிடமிருந்து பெறப்படும் தொகை இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்புக்கும் எதிர்கால அணிவகுப்புகளுக்கும் செலவிடப்படும் என்று மோசடிக்காரர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதோடு ஆடவரின் நிறுவனத்துக்கும் விருது ஒன்று வழங்கப்படும் என்று தகவல் தரப்படுவதோடு நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களை அணிவகுப்புக்கு அழைத்துவரலாம் என்று கூறப்படுகிறது.
எந்த அமைப்புக்குப் பணம் சென்றுசேரும் என்ற கேள்விக்கு, “சிங்கப்பூர் தேசிய தின வாரிய அமைப்பு,” என்று மோசடிக்காரர் பதிலளித்தார்.
அந்த உரையாடல் ஜூன் மாதம் நிகழ்ந்தது என்று ஏற்பாட்டுக் குழு சொன்னது.
மோசடி குறித்து சந்தேகப்படும் பொதுமக்களும் நிறுவனங்களும் ndp@defence.gov.sg என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். பாதிக்கப்பட்டோர் உடனடியாகக் காவல்துறையைத் தொடர்புகொள்ளும்படி ஏற்பாட்டுக் குழு சொன்னது.