தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலி நீதிமன்ற ஆணை மின்னஞ்சல்கள் மூலம் மோசடி

1 mins read
ea7205de-038e-4bbc-b1fa-f6c2946089fe
ஒருவரின் ஐபி (IP) முகவரிக்கு எதிராக நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளதாகக் கூறி, மோசடிப் பேர்வழிகள் ஏமாற்ற முயலலாம் என்று சிங்செர்ட் அமைப்பு எச்சரித்துள்ளது. - படம்: சிங்செர்ட்

சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள்போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிக்காரர்கள் குறித்து சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அவசரகாலச் செயல்பாட்டுக் குழுவிற்குப் (சிங்செர்ட்) பல புகார்கள் வந்துள்ளன.

அந்த மோசடிப் பேர்வழிகள், மக்களை ஏமாற்ற போலி நீதிமன்ற ஆணைகள் அடங்கிய மின்னஞ்சல்களைப் பயன்படுத்துவதாக வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 27) சிங்செர்ட் தெரிவித்தது.

பெறுநரின் இணைய நடப்பொழுங்கு (ஐபி) முகவரி சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி, அதற்கெதிராக நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மோசடிப் பேர்வழிகள் கூறுவர். அதனால், சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டுமெனில் 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்குமாறும் அவர்கள் வற்புறுத்துவர்.

இந்நிலையில், அத்தகைய மின்னஞ்சல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் அவற்றுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்கும்படியும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பணப் பரிமாற்றம் செய்யும்படியோ, வங்கிக் கணக்கு குறித்த விவரங்களையோ அல்லது அதிகாரபூர்வமற்ற தளங்களிலிருந்து மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யும்படியோ சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு அல்லது காவல்துறை அதிகாரிகள் ஒருபோதும் கேட்கமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அத்தகைய மின்னஞ்சல்களின் உண்மைத்தன்மை குறித்து singcert@csa.gov.sg என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி உறுதிசெய்துகொள்ளலாம். அல்லது அதுபற்றி இணையத்தளம் வழியாக சிங்செர்ட் அமைப்பிடம் புகார் அளிக்கலாம்.

மேலும், அத்தகைய மோசடிகளில் சிக்கியோர் அல்லது அதனால் பணத்தை இழந்தோர் காவல்துறையிடம் புகார் அளிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இம்மோசடி குறித்து தகவல் தெரிவிக்க விரும்புவோர் 1800-255-0000 என்ற நேரடி அழைப்பு எண்ணில் காவல்துறையை அழைக்கலாம் அல்லது காவல்துறையின் iWitness தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்