தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடி: 850க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

2 mins read
2b7740d2-a627-44b6-ad17-784554022a5a
கைது செய்யப்பட்டவர்கள் 15 வயதுக்கும் 77 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இவர்கள் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதிக்கும் மார்ச் மாதம் 9ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பிடிபட்டதாகக் காவல்துறை புதன்கிழமை (மார்ச் 19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

மோசடிக் குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் 850க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் பிறரை ஏமாற்றி அவர்களிடமிருந்து $8.1 மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பறித்ததாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் மற்றும் மலேசியக் காவல்துறையினர் நடத்திய ஒரு மாதக்கால அதிரடி நடவடிக்கைகளில் அந்தச் சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 15 வயதுக்கும் 77 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

இவர்கள் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதிக்கும் மார்ச் மாதம் 9ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பிடிபட்டதாகக் காவல்துறை புதன்கிழமை (மார்ச் 19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சந்தேக நபர்கள், 2,700 வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படுகிறது.

அவற்றில் ஆள்மாற்றாட்டம், முதலீட்டு மோசடி, வாடகை மோசடி, இணையம் மூலம் காதல் மோசடி, வேலை மோசடி, மின் வர்த்தக மோசடி ஆகியவை அடங்கும்.

மோசடிக் குற்றங்களுடன் தொடர்புடைய 3,400க்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டதாக மோசடித் தடுப்புத் தளபத்தியமும் மலேசியாவின் தேசிய மோசடித் தடுப்பு நிலையமும் தெரிவித்தன.

இந்த வங்கிக் கணக்குகளிலிருந்து $2 மில்லியனுக்கும் அதிகமான தொகை மீட்கப்பட்டது.

அதிரடி நடவடிக்கைகளுக்கு மலேசிய அரசக் காவல்துறை தலைமை தாங்கியது.

பேங்க் நெகாரா வங்கி மற்றும் மலேசிய தொடர்பு, பன்னூடக ஆணையத்தின் ஆதரவுடன் அதிரடி நடவடிக்கைகளை மலேசியாவின் தேசிய நிதிக் குற்றங்கள் தடுப்பு மையம் ஒருங்கிணைத்தது.

கைது செய்யப்பட்டவர்களில் 34 வயது ஆடவரும் ஒருவர்.

இவர் பிப்ரவரி 28ஆம் தேதியன்று மலேசியாவில் பிடிபட்டார்.

காவல்துறை அதிகாரிகளைப் போல பாசாங்கு செய்து ஏமாற்றிய மோசடிக் கும்பலை அவர் நிர்வகித்ததாகக் கூறப்படுகிறது.

மோசடிக்காரர்கள் விரித்த வலையில் சிக்கி 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் $1.1 பில்லியன் இழப்பு ஏற்பட்டது.

இது, சிங்கப்பூரில் மோசடிக்காரர்களால் ஒரே ஆண்டில் பறிக்கப்பட்ட ஆக அதிகமான தொகையாகும்.

குறிப்புச் சொற்கள்