தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடி குறித்த புகார்கள் 63% அதிகரிப்பு

2 mins read
7dc641a2-4eb4-471a-94ab-ad1fc3f9cc3d
மோசடி குறித்த புகார்களின் எண்ணிக்கை சிங்கப்பூரின் மொத்தப் புகார் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குக்குமேல் பதிவானதாகக் கூறப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மோசடியால் பாதிக்கப்பட்டோர் பதிவு செய்யும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நிதித்துறை சர்ச்சைகளுக்குத் தீர்வுகாணும் நிலையம் (Fidrec) கூறியுள்ளது.

அதன் 2023ஆம் நிதியாண்டான, கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த 12 மாதக் காலகட்டத்தில் நிலையம் கையாண்ட மொத்தப் புகார்களில் மோசடி தொடர்பான புகார்களின் விகிதம் 38 விழுக்காடு என்று அது தெரிவித்தது.

அந்த ஓராண்டுக் காலகட்டத்தில் மோசடி தொடர்பான புகார்களின் எண்ணிக்கை 829ஆகப் பதிவானது. அதற்கு முந்தைய ஓராண்டுக் காலத்தில் அத்தகைய 509 புகார்கள் பதிவானதாக நிலையம், நவம்பர் 21ஆம் தேதி கூறியது.

சென்ற நிதியாண்டில் நிலையம் கையாண்ட மொத்தப் புகார்களின் எண்ணிக்கை 2,162. ஒப்புநோக்க அதற்கு முந்தைய நிதியாண்டில் பதிவான விகிதத்தைவிட அது 45 விழுக்காடு அதிகம்.

புகார்கள் மூலம் கோரப்பட்ட சராசரித் தொகை சென்ற நிதியாண்டில் 12.8 விழுக்காடு அதிகரித்து $51,599 ஆனது. 2022ஆம் நிதியாண்டில் அது $45,760ஆக இருந்தது.

2021ஆம் நிதியாண்டில் மோசடி தொடர்பான 261 புகார்களைப் பெற்றதாகக் கூறிய நிலையம், 2022, 2023ஆம் நிதியாண்டுகளில் அந்த எண்ணிக்கை முறையே 509, 829 என்று கூறியது.

நிலையம் கையாண்ட மொத்தப் புகார்களில் மோசடி தொடர்பான புகார்களின் விகிதம் 2021ல் 28.8 விழுக்காடாகப் பதிவானது. 2022ல் அந்த விகிதம் 34 விழுக்காடாகவும் 2023ல் 38 விழுக்காடாகவும் பதிவானது. 59 விழுக்காட்டு மோசடிகள் கடன் அட்டைப் பயன்பாடு தொடர்பானது என்று குறிப்பிடப்பட்டது.

மோசடிகளால் முதியோர் எளிதில் பாதிக்கப்படுவதாகப் பலரும் கருதும் வேளையில், புகார் செய்தோரில் 72 விழுக்காட்டினர் 31 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று நிலையம் கூறியது. 61 வயதுக்கு மேற்பட்டோரின் விகிதம் 20 விழுக்காடு என்று அது சொன்னது.

பாதிக்கப்பட்டவரின் தனிப்பட்ட விவரங்கள் ஊடுருவப்பட்டதே பெரும்பாலான மோசடிகளுக்குக் காரணம் என்று நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யூனிஸ் சுவா கூறினார்.

குறிப்புச் சொற்கள்