சிங்கப்பூரில் இயங்கும் முக்கிய வங்கிகள் அனைத்தும் இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து எல்லா மின்னிலக்கப் பரிவர்த்தனைகளுக்கும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும்.
இதன்படி டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி, சிட்டிபேங்க், எச்எஸ்பிசி, மேபேங்க், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஆகியவற்றின் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளில் அதிகமானவை 24 மணிநேரத்துக்கு நிறைவுறாமல் இருக்கும். இல்லாவிடில் பரிவர்த்தனை உடனடியாக மறுக்கப்படலாம் என்று சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) தெரிவித்தது.
குறைந்தது 50,000 வெள்ளி சேமிப்பு உள்ள நடப்பு, சேமிப்புக் கணக்குகள் இந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படும். ஒருவருக்கு மேல் உரிமை வகிக்கும் கூட்டு வங்கிக் கணக்குகளுக்கும் இது பொருந்தும்.
ஒரு வங்கிக் கணக்கில் உள்ள பணம் விரைவில் செலவாகும்போது அது மோசடிச் செயலின் காரணமாக இருக்கலாம். அத்தகைய வேளைகளில் இந்தப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் செயல்படும்.
வங்கிச் செயலிகள், வங்கி இணையத்தளங்கள் ஆகியவற்றின்வழி இடம்பெறும் எல்லா மின்னிலக்கப் பரிவர்த்தனைகளுக்கும் இந்தப் பாதுகாப்புக் கட்டுப்பாடு பொருந்தும். ஏடிஎம் இயந்திரங்களில் ரொக்கம் எடுப்பது போன்ற மின்னிலமற்றப் பரிவர்த்தனைகளுக்கு இது பொருந்தாது.
24 மணிநேரத்தில் இடம்பெறும் பரிவர்த்தனை, அன்றைய பொழுது கணக்கிலிருந்து வெளியே எடுக்கப்படும் தொகையின் மொத்த மதிப்பும் அந்தக் கணக்கில் இருக்கும் தொகையில் 50 விழுக்காட்டைத் தாண்டும்போது பாதுகாப்புக் கட்டுப்பாடு செயல்பாட்டுக்கு வரும்.
மின்னிலக்கப் பரிவர்த்தனைகள், பணம் மாற்றுதல் போன்றவற்றை மேற்கொள்ளும்போது வாடிக்கையாளர்கள் தாமதத்தை எதிர்நோக்கக்கூடும். நியாயமான பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்தும்.
அதனால் நேரத்துக்கு மேற்கொள்ளவேண்டிய பரிவர்த்தனைகளைச் சரிவரத் திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தாமதத்தால் வரக்கூடிய கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக இந்த அறிவுரை வழங்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இவற்றோடு, வங்கிகளிடம் மற்ற மோசடி அடையாள முறைகளும் உள்ளன. அவற்றைக் கொண்டு, மேலும் சில அபாய அறிகுறிகளைக் கருத்தில்கொண்டு வங்கிகள் சில பரிவர்த்தனகள் நிறைவுபெறுவதைத் தடுத்துவைக்கலாம் அல்லது அவற்றை முழுமையாக மறுக்கலாம் என்று சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் கூறியுள்ளது.