சிங்கப்பூரில் மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் குறைந்தது 13 மலேசியர்கள் ஒரு மாத காலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த மோசடிச் செயல்களால் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 126.5 மில்லியன் வெள்ளி பறிபோனது. அவர்கள் ஈடுபட்டதாக நம்பப்படும் மோசடிச் செயல்களில் பெரும்பாலானவை அரசாங்க அதிகாரிகளைப் போல் நடித்து மேற்கொள்ளப்பட்டவை.
அவர்களில் ஒருவரான 31 வயது மலேசியரான லீ ஜியென் செங், அரசாங்க அதிகாரிகளைப் போல் நடித்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மோசடிச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆக அண்மையில் நிகழ்ந்த சம்பவங்களில் அவருடன் தொடர்புடையதாக நம்பப்படுபவை அடங்கும்.
மோசடிக்கு ஆளானோர், குற்றம் புரிவோருக்குப் பணத்தைக் கைமாற்றுவோர் ஆகியோரிடமிருந்து ரொக்கம், நகைகள் ஆகியவற்றைப் பெற லீ, மோசடிக் கும்பல்களுக்கு உதவியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சட்டவிரோதச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட 441,000 வெள்ளிக்கும் அதிகதமான தொகையை அவர் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
விவோசிட்டி கடைத்தொகுதிக்கு அருகே உள்ள திறந்தவெளிப் பகுதியில் அவர் வசூலில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. அதற்குப் பிறகு அவர் வசூலித்ததை இதர குற்றக் கும்பல் உறுப்பினர்களிடம் ஒப்படைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அவர் இம்மாதம் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இரு நாள்களுக்குப் பிறகு அவர் மீது நீதிமன்றத்தில், சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் அடைந்த பலன், அடையாளம் தெரியாத தனிநபர்கள் பெற வகைசெயயும் திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சிங்கப்பூரில் இவ்வாண்டு முற்பாதியில் 456 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகை மோசடிகளுக்குப் பறிபோனது. அந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட 20,000 மோசடிச் சம்பவங்கள் குறித்து புகாரளிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு சிங்கப்பூரில் மோசடிகளுக்கு ஆளானோர் 1.1 பில்லியன் வெள்ளியைப் பறிகொடுத்தனர். ஓராண்டில் மோசடிகளுக்கு இவ்வளவு அதிகத் தொகை இதற்கு முன்பு பறிபோனதில்லை.