‘டீப்ஃபேக்’ எனப்படும் வன்போலி செயற்கை நுண்ணறிவு முறையைக் கொண்டு மேற்கொள்ளப்படும் மோசடிகளின் தொடர்பில் விழிப்புடன் இருக்குமுாறு காவல்துறை, வர்த்தகங்களையும் நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
வன்போலி முறையைக் கொண்டு மோசடிக்காரர்கள், நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளைப் போல் முகத்தை ‘மாற்றிக்கொண்டு’ மோசடிச் செயல்களில் ஈடுபடுகின்றனர். பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் நிதி இயக்குநர், இதுபோன்ற மோசடிக்குக் கிட்டத்தட்ட 499,000 டாலரைப் (670,000 வெள்ளி) பறிகொடுக்கவிருந்தார்.
பாதிக்கப்பட்ட நிதி இயக்குநர், வர்த்தக மோசடி ஒன்றுக்கு இழந்த பணத்தை ஹாங்காங் காவல்துறையின் ஏமாற்றுத் தடுப்பு ஒருங்கிணைப்பு நிலையத்தின் (ADCC) உதவியுடன் மீட்டதாக சிங்கப்பூர் காவல்துறையின் மோசடித் தடுப்பு நிலையம் (ASC) திங்கட்கிழமை (ஏப்ரல் 7) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று சம்பந்தப்பட்ட நிதி இயக்குநரை மோசடிக்காரர் வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டார். அந்த மோசடிக்காரர், நிதி இயக்குநர் வேலை செய்யும் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியைப் போல் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து நிதி இயக்குநர், ‘நிறுவன அதிகாரிகள்’ கலந்துகொண்ட மெய்நிகர் சந்திப்பில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். வன்போலி முறையைக் கொண்டு இந்த மோசடிச் செயலில் ஈடுபட்டோர் நிறுவன அதிகாரிகளைப் போல் தங்கள் முகங்களைத் தென்படச் செய்து சந்திப்பில் கலந்துகொண்டனர்.
பிறகு திட்டம் ஒன்றுக்காக நிறவனத்தின் எச்எஸ்பிசி வங்கிக் கணக்கிலிருந்து 499,000 டாலர் தொகையைத் தங்களுக்கு அனுப்புமாறு நிதி இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டது.
மார்ச் 27ஆம் தேதியன்று மேலும் 1.4 மில்லியன் டாலரை அனுப்புமாறு மோசடிக்காரர்கள் கேட்டுக்கொண்ட பிறகுதான் இது மோசடிச் செயல் என்பதை நிதி இயக்குநர் உணர்ந்தார். அவர் உடனடியாக எச்எஸ்பிசி வங்கிக்கும் மோசடித் தடுப்பு நிலையத்துக்கும் தெரியப்படுத்தினார். இழந்த பணம் மீட்கப்பட்டது.