முதலாளிகள் போல் நடித்து மோசடி; இவ்வாண்டு $30,000 பறிபோனது

முதலாளிகள் போல் நடித்து மோசடி; இவ்வாண்டு $30,000 பறிபோனது

1 mins read
40c1aab4-e70e-444c-aa27-9005f75a54e0
இவ்வாண்டு இதுவரை மட்டுமே இத்தகைய மோசடிகள் இடம்பெற்றதாக 25 புகார்கள் தரப்பட்டன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிறரின் வேலையிடத்தில் அவர்களின் முதலாளிகளாக நடித்து மேற்கொள்ளப்படும் மோசடி குறித்துக் கவனமாக இருக்குமாறு காவல்துறை, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மோசடிக்காரர்கள் அவ்வாறு நடித்து அன்பளிப்பு அட்டைகளை வாங்குமாறு மின்னஞ்சல்வழி கேட்டுக்கொள்வதுண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து இத்தகைய மோசடிகளில் மொத்தமாகக் குறைந்தது 30,000 வெள்ளி பறிபோனதாகக் காவல்துறை புதன்கிழமை (ஜனவரி 28) தெரிவித்தது. குறைந்தது 25 இத்தகைய சம்பவங்கள் தொடர்பான புகார்கள் கொடுக்கப்பட்டதாகவும் காவல்துறை சொன்னது.

ஏமாறவிருப்போருக்கு மின்னஞ்சல் அனுப்பும்போது அவர்களின் வேலை நிர்வாகிகளின் பெயரைப் போல் மோசடிக்காரர்கள் தங்கள் பெயரை வெளிப்படுத்துவர். அதனைத் தொடர்ந்து வேலை காரணங்களுக்காக ரேஸர் கோல்ட், ஆப்பிள், எக்ஸ்பாக்ஸ் போன்ற நிறுவனங்களிலிருந்து அன்பளிப்பு அட்டைகளை வாங்குமாறு கேட்டுக்கொண்டு மோசடிக்காரர்கள் ஏமாற்றுவர்.

அந்தத் தொகையை அவரவர் நிறுவனம் பின்னர் திரும்பித் தரும் என்று கூறி மோசடி மேற்கொள்ளப்படுகிறது. பாதிக்கப்பட்டோர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை சக ஊழியர்களிடமிருந்து தெரிந்துகொள்வர்.

இந்த வகை மோசடி குறித்து தங்கள் ஊழியர்களுக்குப் புரிய வைக்குமாறு காவல்துறை, நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டது. குறிப்பாகப் புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்ட ஊழியர்கள், பயில்நிலைக் கல்வி மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு இது பொருந்தும்.

குறிப்புச் சொற்கள்