தமது தந்தை தொலைபேசியில் சங்கடத்துடன் பேசுவதைக் கண்ட 27 வயது அய்டி (முழுப்பெயர் அல்ல), ‘ஸ்கேம்ஷீல்ட்’ எனும் மோசடிகளைத் தடுக்கும் அமைப்புக்கு புகார் செய்ததால் அவரது தந்தையின் வாழ்நாள் சேமிப்பு காப்பற்றப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த சம்பவத்தை பிப்ரவரி 19ஆம் தேதி நினைவுகூர்ந்த அய்டி, தமது தந்தை ஏறக்குறைய பணத்தை இழந்திருப்பார் என்றார்.
ஸ்கேம்ஷீல்ட் உதவி அழைப்பு எண் பற்றி பலரும் தெரிந்துகொள்வதற்காக ஊடங்களிடம் அய்டி பேச காவல்துறை ஏற்பாடு செய்திருந்தது.
அய்டியின், 63 வயது தந்தைக்கு வந்த அழைப்பில் டிபிஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்ட ஒருவர், பற்று அட்டை மூலம் 4,000 வெள்ளிக்கு நடந்த சட்டவிரோதப் பரிவர்த்தனையை விசாரிப்பதாகக் கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்து விசாரணைக்கு பயந்த அந்த முதியவர், அந்தத் தொலைபேசியில் கூறியதைப் போல படுக்கை அறைக்குள் சென்று மூடிக்கொண்டார்.
இதனைப் பார்த்த அய்டிக்கு சந்தேகம் எழுந்தது. உதவி செய்ய வந்ததையும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
ஸ்கேம்ஷீல்ட் அமைப்புக்கு அய்டி தகவல் தெரிவித்ததும் அதன் ஊழியர் மோசடிக்காரர்களுக்கு பணம் மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தினார்.
2024ல் ஸ்கேம்ஷீல்டுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 1.1 பில்லியன் வெள்ளியை இழக்கும் அழைப்புகள் வந்தன. இது, 2023ல் மோசடிகளில் இழந்த 651.8 மில்லியன் வெள்ளியுடன் ஒப்பிடுகையில் 70.6 விழுக்காடு அதிகம் என்று காவல்துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2024 செப்டம்பரில் 24 மணி நேர ஸ்கேம்ஷீல்ட் உதவி தொலைபேசி எண் 1799 தொடங்கப்பட்டது. இதனை தேசிய குற்றத் தடுப்பு மன்றம் செயல்படுத்தி வருகிறது.
இந்தத் தொலைபேசிக்கு நாள்தோறும் சுமார் 500 அழைப்புகள் வருவதை பிப்ரவரி 25ஆம் தேதி காவல்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

