ஹவ்காங்கில் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 9) நிகழ்ந்த விபத்தில், வேன் ஓட்டுநர் ஒருவரைச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் கருவிகளின் துணையுடன் மீட்டனர்.
ஹவ்காங் அவென்யூவில் நிகழ்ந்த அவ்விபத்து குறித்து காலை 7.25 மணிக்குத் தனக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அவ்விபத்தில் இரண்டு வேன்களும் ஒரு சிற்றுந்தும் சிக்கின.
சம்பவ இடத்திற்கு விரைந்த குடிமைத் தற்காப்புப் படையினர், வேன் ஓட்டுநர் ஒருவர் தமது இருக்கையிலிருந்து நகர முடியாதபடி மாட்டிக்கொண்டிருந்ததைக் கண்டனர்.
64 வயது வேன் ஓட்டுநரும் 74 வயது சிற்றுந்து ஓட்டுநரும் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
இன்னொரு வேனை ஓட்டிச் சென்ற 40 வயது ஆடவர் இலேசாகக் காயமுற்று இருந்ததாகவும் அவர் மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
அந்தச் சிற்றுந்து, ஒரு பள்ளி வாகனம் என்றும் பிள்ளைகளை ஏற்றிச் செல்வதற்காக அதன் ஓட்டுநர் சென்றுகொண்டிருந்தார் என்றும் ஷின் மின் ஊடகச் செய்தி குறிப்பிட்டது.
விபத்து நிகழ்ந்தபோது அவ்வாகனத்தில் குழந்தைகள் யாரும் இல்லை என்று அப்பள்ளி வாகன நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சிற்றுந்தின் 74 வயது ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

