காக்கி புக்கிட் தொழிலகக் கட்டடத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) நிகழ்ந்த தீச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.
25 காக்கி புக்கிட் சாலை 4 என்ற முகவரியில் அமைந்துள்ள அக்கட்டடத்தில் நிகழ்ந்த தீச்சம்பவம் குறித்துப் பிற்பகல் 12.55 மணிவாக்கில் தனக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக் வழியாகத் தெரிவித்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பாய லேபார், தெம்பனிஸ் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பாளர்கள், அக்கட்டடத்தின் ஐந்தாம் தளத்தில் தீப்பற்றியிருந்ததைக் கண்டனர்.
தீப்பற்றிய அறைக்கு எதிரிலிருந்த அறையில் இருவர் சுயநினைவிழந்த நிலையில் இருந்ததைத் தீயணைப்பாளர்கள் கண்டனர்.
அவ்விருவருக்கும் தீயணைப்பாளர்கள் ‘சிபிஆர்’ எனப்படும் இதய இயக்கமீட்பு சிகிச்சை அளித்தனர். பின்னர் அவ்விருவரும் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
இருப்பினும், அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.
தீப்பிடித்த தளம் முழுவதும் புகை சூழ்ந்திருந்ததாகவும் இரண்டு நீர்க்குழாய்களின் துணையுடன் தீயை அணைத்ததாகவும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் அது தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
சினர்ஜி@கேபி என்ற அக்கட்டடத்தில் வாகனத் தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள் இயங்கி வருவதை கூகல் தகவல்கள் காட்டின.
பிற்பகல் 3 மணியளவில் அங்குச் சென்றபோது, நூற்றுக்கணக்கான ஊழியர்கள் காக்கி புக்கிட் சாலை 4ன் இருமருங்கிலும் திரண்டிருந்தனர்.
தீப்பற்றிய கட்டடத்திற்குச் செல்லும் சாலைகளைத் தடுப்புகள் அமைத்து காவல்துறை மறைத்திருந்தது.
கட்டடத்தின் எட்டாம் தளத்திலுள்ள தம் அலுவலகத்திலிருந்து சக ஊழியர்கள் ஒன்பது பேருடன் தப்பியதாகக் கூறினார் பெயர் தெரிவிக்க விரும்பாத ஊழியர் ஒருவர். அவர்களுள் ஐந்து வயதுக் கர்ப்பிணியான 26 ஷேரன் குவெக்கும் ஒருவர்.
தீ விரைந்து அணைக்கப்பட்டுவிட்டதால் தமக்குக் காயமேதும் ஏற்படவில்லை என்று திருவாட்டி ஷேரன் கூறினார்.
சென்ற ஆண்டு தொழில்துறை வளாகங்கள் சம்பந்தப்பட்ட 106 தீச்சம்பவங்கள் பதிவாயின. 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட 140 தீச்சம்பவங்களைக் காட்டிலும் அது 24.3 விழுக்காடு குறைவு என்று குடிமைத் தற்காப்புப் படையின் வருடாந்தரப் புள்ளிவிவரங்கள் காட்டின.

