தீயணைப்பு நடவடிக்கையின்போது 19 வயது தேசிய சேவையாளர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவருடைய உயரதிகாரிமீது அக்டோபர் 16ஆம் தேதி திங்கட்கிழமை குற்றம் சுமத்தப்படவுள்ளது.
ஹெண்டர்சன் சாலையிலுள்ள ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எட்வர்ட் கோ என்ற தேசிய சேவையாளர் உயிரிழக்க நேரிட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி புளோக் 91ல் உள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
அப்போது, அவ்வீட்டில் கோ மட்டும் தனியாக இருந்தார் என்றும் அந்த 38 வயது குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி எவரிடமும் சொல்லாமல் அவ்விடத்தைவிட்டு அகன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்றும் சிங்கப்பூர் காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
அவரது இச்செயல், வழக்கமான செயலாக்க நடைமுறைகளுக்கு எதிரானது.
தமது செயலால் இன்னொருவரின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்குத் தீங்கு நேரும் வகையில் நடந்துகொண்டதாக அந்தக் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிமீது குற்றஞ்சாட்டப்படும்.
குற்றமிழைத்தது உறுதிப்படுத்தப்பட்டால், அந்த அதிகாரிக்கு நாலாண்டுவரை சிறையும் அல்லது $10,000 வரை அபராதமும் அல்லது அவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
உபியிலுள்ள குடிமைத் தற்காப்புப் படை தலைமையகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அப்படையின் ஆணையர் எரிக் யாப், முதல்நிலை சார்ஜண்ட் கோவைத் தனியாக அவ்வீட்டில் விட்டுச் சென்றதன் மூலம் குடிமைத் தற்காப்புப் படையின் தீயணைப்புக் கோட்பாடுகளை மீறிவிட்டதாக அந்த அதிகாரிமீது குற்றம் சுமத்தப்படும் என்று கூறினார்.


